யார் இந்த அழகேசன்? - கல்லூரி மாணவி கொலையில் திடுக் தகவல்  

சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி கொலையில் போலீஸாரிடம் சிக்கிய அழகேசன் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரி வாசலில் இன்று பிற்பகல் அஸ்வினி என்ற கல்லூரி மாணவி, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவரைக் கத்தியால் குத்திய வாலிபரைப் பொதுமக்கள் மடக்கிப்பிடித்து கே.கே.நகர் போலீஸில் ஒப்படைத்தனர். மாணவி கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த பொதுமக்கள், அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதில், அந்த வாலிபர் படுகாயமடைந்தார். 

இந்தச்சூழ்நிலையில் போலீஸிடம் பிடிபட்ட வாலிபரின் பெயர் அழகேசன், மதுரவாயல் தனலட்சுமி நகரைச்  சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அஸ்வினிக்கும் மதுரவாயல் பகுதிதான். அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வினியை அழகேசன் காதலித்துள்ளார். ஆனால், அவர் காதலிக்கவில்லை. அழகேசனின் டார்ச்சரால் அஸ்வினி நிலைகுலைந்தார். இந்தச் சமயத்தில் வீட்டிலிருந்த அஸ்வினிக்கு அழகேசன் தாலிகட்டியுள்ளார். இதையடுத்து, அழகேசன்மீது மதுரவாயல் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர், அழகேசனை எச்சரித்து அனுப்பினார். அதன்பிறகும் அழகேசன் திருந்தவில்லை. அஸ்வினியைத் தொடர்ந்து காதலித்துவந்துள்ளார். அழகேசனின் தொந்தரவிலிருந்து தப்பிக்க அஸ்வினி, சென்னை ஜாபர்கான்பேட்டைக்கு இருப்பிடத்தை மாற்றினார். இருப்பினும் அழகேசனின் டார்ச்சர் தொடர்ந்தது. இந்த நிலையில் அஸ்வினியை பழிவாங்கும் நோக்கில் இன்று கல்லூரி முன்பு காத்திருந்தார் அழகேசன். கல்லூரி முடிந்து அஸ்வினி வெளியில் வந்தவுடன் அவரைச் சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காத்திருந்த இன்ஜினீயர் சுவாதி, கடந்த 2016-ல் கொலைசெய்யப்பட்டார். அந்த வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார். சுவாதி கொலை செய்யப்படுவதற்கும் ஒருதலைக்காதலே காரணம் என்று போலீஸார் தெரிவித்தனர். இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னையில் மீண்டும் ஒருதலைக் காதலால் அஸ்வினி என்ற மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!