வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (09/03/2018)

கடைசி தொடர்பு:19:00 (09/03/2018)

சாலையில் ஆபத்தான அ.தி.மு.க பேனர்கள்... பைக்கில் சென்றவர்களுக்கு நடந்த விபரீதம்

பேனர்கள்

தேனி மாவட்டத்தில் சமீபகாலமாகப் பேனர் பஞ்சாயத்துகள் தலைவிரித்து ஆடுகிறது என்றே சொல்ல வேண்டும். தினகரன் தரப்பு பேனர்களைப் பன்னீர்செல்வம் தரப்பினர் சேதப்படுத்துவதும் பதிலுக்கு தினகரன் தரப்பு பன்னீர்செல்வத்தின் பேனர்களைச் சேதப்படுத்துவதும் தொடர்ந்துகொண்டிருந்தது. இந்தச் சூழலில், இரண்டு நாள்களுக்கு முன்னர், பெரியகுளத்தில் தினகரன் தரப்புக்கும் பன்னீர்செல்வத்தின் மகன் ரவி தரப்புக்கும் மீண்டும் பேனர் பிரச்னை உருவாக, சாலை மறியலில் ஈடுபட்டனர் ரவி தரப்பு ஆதரவாளர்கள். இதனால், தேனி வர இருந்த தினகரன், பெரியகுளத்தைக் கடந்து தேனிக்குள் வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சரி செய்தனர் போலீஸார். இதற்கு தலைமையேற்ற பெரியகுளம் டி.எஸ்.பி வினோஜி அடுத்த நாளே டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். சிறிய பேனர் பிரச்னைக்கு டி.எஸ்.பி’யை மாற்றியது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை, பெரியகுளத்தில், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பாக 7,070 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்காகச் சாலை ஓரங்களில் பன்னீர்செல்வம், அவர் மகன் ரவி புகைப்படங்கள் தாங்கிய பேனர்கள் சின்னதும் பெரியதுமாகத் தேனி மாவட்டம் முழுவதும் நிறைந்து காணப்படுகின்றன.

பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகப் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் மின் கம்பங்களை உரசியபடி ஆபத்தான வகையில் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சூழலில், பெரியகுளம் அருகே தென்கரையில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர் விழுந்ததில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ``பல இடங்களில் அனுமதி இல்லாமலும் விதிமீறியும் வைக்கப்பட்டுள்ள பேனர்களைப் போலீஸார் அப்புறப்படுத்த யோசிக்கிறார்கள். பெரியகுளம் டி.எஸ்.பி வினோஜிக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கும் ஏற்படலாம் என்ற அச்சத்தில் அமைதியாக இருக்கிறார்கள்’’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.