அண்ணாசாலையில் திடீர் போராட்டம், உருவப்படங்கள் எரிப்பு!

லெனின், அம்பேத்கர், பெரியார் ஆகிய தலைவர்களின் சிலைகள் உடைப்புக்குக் கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. சென்னை அண்ணாசாலையில் இன்று காலை திடீர் போராட்டம் நடத்தப்பட்டது. 

திரிபுராவில் பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்ததையொட்டி புதிய அரசு பதவியேற்கும் முன்னரே அங்கு அமைக்கப்பட்டிருந்த லெனின் சிலையை வன்முறைக் கும்பல் உடைத்து சரித்தது. அதையொட்டி பாஜகவின் தேசியச் செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜா, தமிழகத்தில் பெரியார் சிலைகள்தான் அடுத்த இலக்கு என்கிறபடி ட்விட்டரில் செய்திவெளியிட்டார். கடும் எதிர்ப்பையடுத்து, தனக்குத் தெரியாமல் தன்னுடைய பணியாளர் பதிவிட்டதாக அவர் விளக்கமளித்தார்.

போராட்டம்

இதற்கிடையில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு பெயின்ட்டை ஊற்றி அவமதிப்பு செய்தனர். இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பல அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றன. 

போராட்டம்

சென்னையில் இன்று முற்பகல் 11 மணியளவில் அண்ணாசாலை, பெரியார் சிலை அருகே திரண்ட புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர், சிம்சன் ஆலை அருகிலிருந்து பேரணியாகப் புறப்பட்டனர். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். சமத்துவத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களின் சிலையை உடைத்த பாஜகவினருக்குக் கண்டனம் தெரிவித்து, கோஷமிட்டனர். சட்டவிரோதமாகப் பேசிய ஹெச்.ராஜாவைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டம்

அப்போது அவர்களில் சிலர், ராஜா மற்றும் பிரதமர் மோடியின் படங்களை எரிக்க முயன்றனர். உடனடியாகத் தண்ணீரைக் கொண்டுவந்து போலீஸார் அதை அணைத்தனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்த போலீஸார், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மண்டபத்தில் பிடித்துவைத்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!