வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (09/03/2018)

கடைசி தொடர்பு:18:28 (09/03/2018)

`காவல்துறையின் செயல்பாடுகள் விவாதிக்கப்பட வேண்டும்!’ - சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்

காவல்துறையிலுள்ள பிரச்னைகள் விவாதிக்கப்பட்டால் மட்டுமே, அந்தத் துறையில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வுகிட்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

சமீபகாலங்களில் காவல்துறை தொடர்பான செய்திகளை அதிகம் கடந்து வந்துகொண்டிருக்கிறோம். மன அழுத்தம் காரணமாகக் காவலர்கள் தற்கொலை, பொதுமக்களிடம் அத்துமீறுவது எனப் பல்வேறு செய்திகள் காவல்துறையைக் கலங்கடித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டுமென்றால், காவல்துறையில் உள்ள பிரச்னைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.  
இதுதொடர்பாக சூழலியல் மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``திருநெல்வேலி மாவட்டப் போலீஸாருக்கு சட்ட விதிமுறைகள் குறித்து வாக்கி டாக்கி மூலம் எஸ்.பி.அருண்சக்தி குமார் பயிற்சி அளித்து வந்தாலும், அவை குறித்து அறிந்துகொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருந்த 30 போலீஸாருக்கு விளக்கச் சீட்டு (MEMO) அளித்தது பாராட்டத்தக்கது. இதே அக்கறையைக் கந்துவட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே அங்கு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அவர் முன்வருவாரா? 

2011-ம் ஆண்டுக்குப் பின்னர், தமிழகத்தில் எந்தவொரு காவல்நிலையத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபடவில்லை - ஆர்.டி.ஐ தகவல். லஞ்ச ஒழிப்புத்துறையினர், காவல் துறையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவது, காவல் நிலையங்களில் நடக்கும் சட்ட முறைகேடுகள் வெளிவருவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து சிந்திப்பதாலும் திடீர் சோதனைகளில் அவர்கள் ஈடுபடமுடிவதில்லை. தமிழகத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் தண்டனை பெறுபவர்களைவிட விடுவிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகம். `தேசிய மனித உரிமை ஆணையத்தில் போலீஸாருக்கு எதிராக ஆண்டுக்கு 70,000 புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. நாட்டின் 3-ல் 2 பங்கு மக்கள் கிராமங்களில் மனித உரிமை குறித்தான விழிப்பு உணர்வு இன்றி வாழ்வது போலீஸாருக்கு சாதகமாக உள்ளது’ -`INDIAN POLICE JOURNAL’ (APRIL – SEPTEMBER 2016 Vol.63 No.2-3). இங்கு, 60 சதவிகித கைதுகள் தேவையற்றது. 

சட்ட ஆணையத்தின் 177-ம் அறிக்கையில், `வெறும் விசாரணைக்கு கைது என்பது தேவையற்றது. சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் கைது என்பது தவறு என இருந்தும், மத்திய மாநில அரசுகள் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றவியல் விதிமுறை பிரிவு 41-ன் மூலமே நீதிமன்ற ஆணை இல்லாமலே கைது செய்யும் வாய்ப்பை காவல்துறைக்குக் கொடுப்பதால், அதில் மாற்றம் தேவை.
காவல்துறையினரால் செய்யப்படும் முக்கிய பிரச்னை முதல் தகவல் அறிக்கை (FIR) பதியாமல் போவது / தேவையில்லாமல் பதிவது: தேசிய காவல் ஆணையத்தின் 4 வது அறிக்கையில் 2003-மலிமாத் குழு அறிக்கை, 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற லலிதா குமாரி வழக்கில், ஒவ்வொரு வருடமும் பெருமளவில் முதல் தகவல் அறிக்கை என்பது பதிவு செய்யப்படாமல்போவது பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியலமைப்பு கொடுத்த மனித உரிமை மீறல் செயல்பாடே. தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காவல்துறையினரின் மோசமான  நடவடிக்கை காரணமாக 75 சதவிகித மக்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முன்வரவில்லை என்ற செய்தி உள்ளது. 
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியச் செயலாளர் சுரேஷின் கருத்து, `இந்திய காவல் சட்டம் 1861, உட்பிரிவு 29-ன்படி விசாரணைக் கைதிகளைக் கையாளும்போது  முரட்டு பலத்தைப் பயன்படுத்தக் கூடாது என உள்ளது.

மருத்துவர் புகழேந்திகுற்றவியல் விதி நடைமுறை, உட்பிரிவு 197-ன்படி காவல்துறையினர் பணியில் இருக்கும்போது எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகச் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாது என இருப்பதும், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனில் துறைசார்ந்த உயரதிகாரிகளிடம் முன்கூட்டியே ஒப்புதல் பெற்ற பிறகுதான் மேற்கொள்ள வேண்டும் என இருக்கிறது. ஆனாலும், மாற்றுத் தீர்ப்புகள் உள்ளன (மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் - நீதிபதி கொசாலே/அனிக்கத் கிச்சி வழக்கு - 4 போலீஸாருக்கு 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது). அடிப்பதும் உதைப்பதும் மிரட்டுவதும் காவல்துறையினரின் பணி எனக் கோர முடியாது எனச் சட்டம் சொல்கிறது. 
பிரகாஷ் சிங் Vs இந்திய அரசு வழக்கில் (காவல்துறை திறமையாகச் செயல்படாதது குறித்தும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்தும், அவ்வழக்கின் முக்கிய அம்சம்) 2006-ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், முக்கியமான 6 பரிந்துரைகளைச் செய்தும் இன்றளவும் அரசால் அவை பின்பற்றப்படவில்லை. 

முன்சி சிங் கவுதம் Vs மத்தியப்பிரதேச அரசு வழக்கில் 2004-ம் ஆண்டு நவம்பர் 16-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், `காவல்துறையினரால் நடத்தப்பட்ட குற்றங்களை விசாரிக்கும்போது சகோதரப்பாசம் அவர்கள் கண்களைக் கட்டுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளது. டி.கே.பாசு, கைது செய்யும்போது எந்த விதிமுறைகளைக் காவல்துறையினர் பின்பற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்து (டி.கே.பாசு Vs மேற்குவங்க அரசு) அதன் தீர்ப்பு 1997-ல் உச்ச நீதிமன்றத்தால் தெளிவாக வழிகாட்டப்பட்டும் நடைமுறையில் அது கடைப்பிடிக்கப்படுவதில்லை. பி.பி.உன்னிக்கிருஷ்ணன் Vs குட்டியோட்டில் அலிக்குட்டி வழக்கின் தீர்ப்பில் பணியிலிருக்கும்போது காவலர்களுக்கு இருக்கும் பொறுப்புக்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கும் சரியான காரணத் தொடர்பில்லாமல் வரம்புமீறிய நிலையில் இருந்தால், காவலர்கள் பாதுகாப்பு கோரமுடியாது என்பது உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் ஜூலை-04/1985-ல் காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளில் அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகளை மதித்து நடப்பதிலிருந்து பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொள்ள வேண்டுமென்றும் முடிந்தவரை முரட்டுப் பலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும் வேறு வழியே இல்லையென வரும்போது மிகக்குறைந்த பலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெளிவாக உள்ளது என்பன முக்கியமானது. காவல்துறை குறித்தான டெல்லி கோஸ்லா அறிக்கையில் காவலர்கள் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டுமென்றும் தன் அரசியல் குருக்களுக்கு அடிபணியக் கூடாது என்றும் உள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரப்படி கடந்த 2015 - 2016 இடைப்பட்ட காலத்தில் 35,831 புகார்கள் காவல்துறைக்கு எதிராக இருந்தும், 94 புகார்களுக்கு மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 2015-ல் காவல் நிலையத்தில் நிகழந்த மரணங்களின் எண்ணிக்கை 97 ஆகும். இந்த 97 காவல்நிலைய மரணங்களில் 67 மரணங்கள் குறித்து முறையான அறிக்கை, சரியான நேரங்களில் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு (உதாரணம்: விசாரணைக் கைதிகளை 24 மணி நேரத்துக்குள் நீதிபதி முன் ஆஜர்படுத்த வேண்டும் என்பது) சேரவில்லை. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் காவல் துறையினருக்கு எதிரான புகார்களை விசாரிக்க தனி அமைப்பு உள்ளது. இந்தியாவில் அத்தகைய அமைப்புகள் இல்லை
முன்னாள் டி.ஜி.பி நட்ராஜ் கடந்த 2017-ல் மனித உரிமை நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘70 முதல் 80 சதவிகித தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்பிக்கப்படும் புகார்கள் காவல்துறையினருக்கு எதிரானது' என்று தெரிவித்துள்ளார்’’ என்று முடித்தார்.