`நிறைய பேச வேண்டியிருக்கிறது' - கணவரைச் சந்திக்க இருப்பதாக ஹதியா பேட்டி

ஹதியா

"பத்திரிகையாளர்களிடம் நிறைய பேச வேண்டியிருக்கிறது. நான் ஊருக்குப் போயிட்டு என் கணவரைச் சந்தித்து விட்டுப் பேசுகிறேன்" என்று கேரளப் பெண் ஹதியா கூறினார்.

கேரளாவில் இந்து மதத்தை சார்ந்த அகிலா என்பவரை, ஹதியா எனப் பெயர் வைத்து முஸ்லிம் மதத்தை சார்ந்த ஷஃபின் ஜஹான் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் அகிலாவின் குடும்பத்தினர் கேளர உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், ''ஷஃபின் ஜஹான் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் பயிற்சி பெற்றவர். என் மகளை மதம் மாற்றி ஐ.எஸ். அமைப்பில் சேர்க்கப் போகிறார்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஹதியாவின் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்தது.

அதையடுத்து ஷஃபின் ஜஹான் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஹாதியாவின் திருமணம் செல்லும். மேஜர் என்பதால் அவர் விரும்பியவரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை அவருக்கு உண்டு. இதை யாரும் தடுக்க முடியாது'' என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து சேலம் மாவட்டம் சித்தர்கோவில் பகுதியில் உள்ள சிவராஜ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் ஹாதியாவைச் சந்திக்க நேஷனல் மீடியாக்களும், கேரள, தமிழக மீடியாக்களும் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.  

இந்தச் சூழ்நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஹதியா, ''என்னுடைய வழக்கிற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. நான் சொல்ல வேண்டிய கருத்துகள் முழுவதையும் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக தெளிவாகச் சொல்லிவிட்டேன். இந்த நாள் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பத்திரிகையாளர்களிடம் நிறைய பேச வேண்டியிருக்கிறது. நான் ஊருக்குப் போயிட்டு என் கணவரைச் சந்தித்து விட்டுப் பேசுகிறேன். இங்கு என் கணவர் வருவதாக சொல்லியிருக்கிறார். அதற்காக நான் 10 நாள்கள் விடுமுறை கேட்டு விண்ணப்பித்து இருக்கிறேன். அவர் வந்து என்னை ஊருக்கு அழைத்துக் கொண்டு போவார். அங்கு என் கணவரிடமும், வழக்கறிஞரிடமும் கேட்டு விட்டு மேற்கொண்டு செயல்படுவேன். தமிழகத்தில் உள்ளவர்களும், தமிழகக் காவல்துறையும் நன்றாக உதவினார்கள். எனக்கு மகளிர் தினத்தன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பது மகளிர் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டவர்களின் கஷ்டங்கள் வீணாகவில்லை. பெண்கள் தனி மனித உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!