ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்காக நடந்த மணல் குவாரி டெண்டர்?

திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் குவாரி டெண்டர் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதி, ஆரணி ஆற்றில் மணல் குவாரி திறக்க அரசு முடிவு செய்தது. அதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆன்லைனில் இன்று (9.3.2018) பலர் விண்ணப்பித்தனர். ஆனால், பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை. இதனால், தகுதியிருந்தும் டெண்டரை எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். 

டெண்டருக்கு விண்ணப்பிக்க முடியாதவர்கள் கூறுகையில், "பொதுப்பணித்துறை சார்பில் நடத்தப்பட்ட டெண்டரில் பங்கேற்க விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 20 லாரிகள், 4 பொக்லைன், 2 புல்டோசர் வாகனங்கள் வைத்திருப்பவர்களே இந்த டெண்டரில் பங்கேற்க முடியும். அதில், 20 லாரிகளில் 16 லாரிகள் டெண்டர் எடுப்பவரின் பெயரில் இருக்க வேண்டும். வைப்புத் தொகையாக ஒரு லட்ச ரூபாய்க்கு, 6 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை நிர்ணயித்த தகுதிகள் இருந்தும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியவில்லை. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தபோதிலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்த டெண்டர் மீது எங்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. டெண்டரை முறையாக நடத்த வேண்டும்" என்றனர். டெண்டருக்கு விண்ணப்பிக்க முடியாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஆட்சியாளர்களுக்குச் சாதகமானவர்களுக்கு குவாரி டெண்டர் வழங்க வாய்ப்புள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.    
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!