வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (09/03/2018)

கடைசி தொடர்பு:20:20 (09/03/2018)

துரத்தி துரத்திப் பிடித்தனர்! சேலம் ரவுடிகளைக் கலங்கடித்த போலீஸ்

சேலத்தில் குற்றப்பின்னணி கொண்ட 52 ரவுடிகளைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.  

சேலம் மாநகரக் காவல் அலுவலகம்

 

சேலத்தில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கும்வகையில், நேற்று இரவு முதல் தற்போது வரை குற்றப்பின்னணி உடைய 52 ரவுடிகளை தேடித் தேடி கைது செய்து வருகிறார்கள் காவல்துறையினர். போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் ரவுடிகள் ஒன்று திரண்டு பிறந்த நாள் விழா கொண்டாடியதை தொடந்து தமிழகம் முழுவதும் ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கைகளை காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாகக் கடந்த 10 நாள்களுக்கு முன்பு சேலம் மாநகரம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 72 பேரை கைது செய்தார்கள். 

கைது செய்யப்பட்ட அனைவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்கள். ஆனால், நீதிமன்றம் ஓரிரு நாளில் 16 பேரை ஜாமீனில் விடுதலை செய்தது. இந்த நிலையில் சென்னையில் தமிழக முதல்வரின் தலைமையில் நடைப்பெற்ற காவல்துறையினர் மாநாடு நடந்து முடிந்த நிலையில், முதல்வரின் சொந்த மாவட்டத்தில் காவல்துறையினரின் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அதையடுத்து நேற்று இரவு முழுவதும் சேலம் மாநகரில் உள்ள 11 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு பல்வேறு வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறி 52 பேரை கைது செய்துள்ளனர்.

குறிப்பாக சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகப்பட்சமாக 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுபோன்று மாநகரம் முழுவதும் கைது செய்யப்பட்ட 52 பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர். காவல் துறையினரின் நடவடிக்கை குறித்து கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், ''சேலம் மாநகரக் காவல் துறையினர் உண்மையான ரவுடிகளை கைது செய்யவில்லை. வாய் தகராறு உள்ளிட்ட சின்னச் சின்ன பிரச்னைகளில் சிக்கி பல மாதங்களுக்கு முன்பு காவல் நிலையங்களுக்கு வந்தவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து வந்து அவர்களை ரவுடிகள் என்று கூறி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே வழக்குகளில் கைது செய்யப்பட்டு வழக்கு முடிந்து தற்போது திருந்தி வாழ்ந்து வருபவர்களையும் ரவுடிகள் என்று கூறி கைது செய்திருக்கிறார்கள்'' என்றார்கள்.