`காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக நாராயணசாமி செயல்படுகிறார்!’ - வெடிக்கும் அ.தி.மு.க

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செயல்படுவதாக அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் இன்று (9.3.2018) செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவர் அன்பழகன், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசாக இருந்தாலும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். அதுதான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை. ஆனால், அப்படிச் செய்யாமல் மக்களை ஏமாற்றும் விதத்தில் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்து சட்ட விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது புதுச்சேரி அரசு. எம்.எல்.ஏ-க்களை ஜனநாயகக் கடமையைச் செய்யவிடாமல், திட்டமிட்டு மூன்று மாதங்களுக்கான செலவீனம் என்ற பெயரில் முன் அனுமதியைப் பெறுகிறார்கள். இந்த ஆண்டு மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்துக்கு 1,471 கோடி ரூபாயை ஒதுக்கியது. மாநில வருவாயோடு வெளி மார்க்கெட்டில் கடன் வாங்கி முழுமையான பட்ஜெட் போட்டிருக்கலாம். துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும் அதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறார். இந்த இடைக்கால பட்ஜெட்டில் ஆளுநர் உரையும் இடம்பெறாது. அதனால், உள்கட்டமைப்பு போன்ற வளர்ச்சித் திட்டங்களும் இருக்காது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்.

புதுச்சேரி

அரசு சார்பு நிறுவன ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் என சுமார் 12 ஆயிரத்து 855 ஊழியர்களுக்குக் கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இவர்களுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியும் எங்கே போனது என்று தெரியவில்லை. காவிரி மேலாண்மை விவகாரத்திற்காகக் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எந்தவிதமான தீர்க்கமான முடிவையும் முதல்வர் நாராயணசாமியால் எடுக்க முடியவில்லை. குறிப்பாக காவிரி மேலாண்மை விவகாரத்தில் முதல்வர் நாராயணசாமி கர்நாடக அரசுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார். அவர் காங்கிரஸ்காரர் என்பதை மறந்துவிட்டு, புதுச்சேரி மாநிலத்தில் முதல்வராகச் செயல்பட வேண்டும். காவிரி விவகாரத்தில் புதுச்சேரி அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் விவகாரத்தில் முன்னால் முதல்வர் ரங்கசாமிக்கும், தற்போதைய முதல்வர் நாராயணசாமிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!