`காவல் ஆய்வாளர் காமராஜ்மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்..!’ எவிடென்ஸ் கதிர் வலியுறுத்தல்

காவல் ஆய்வாளர் காமராஜ்மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று எவிடன்ஸ் கதிர் வலியுறுத்தியுள்ளார்.

 திருச்சியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் காமராஜ், ஹெல்மெட் அணியாமல் சென்ற தம்பதியைத் துரத்திச் சென்று எட்டி உதைத்தார். அதில், வண்டியிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உஷாவின் கணவரை சமூகச் செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து அவரிடம் பேசும்போது, 'கொடுஞ்செயலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் காமராஜை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து மாநிலக் காவல்துறை விசாரிக்கும்போது, காமராஜ்க்கு ஆதரவாக அமையும். எனவே, இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். தற்போது, தமிழ்நாட்டில் போக்குவரத்துக் காவலர்கள் வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. பொதுவாக, பேரணி போன்ற சம்பவங்களில் வன்முறை ஏற்படும் சமயங்களில்தான், காவல்துறையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். தற்போது, வாகனச் சோதனை என்ற பெயரில் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்கள் மீது வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

ஒரு சில வருடங்களுக்கு முன்னர், சென்னையில் வாகனச் சோதனையின்போது, காவலர் துரத்திச் சென்றதால் இளைஞர் ஒருவர் பலியானார். தற்போது, உஷா கொலைசெய்யப்பட்டுள்ளார். பொதுமக்களை, காரணமில்லாமல் போக்குவரத்து போலீஸார் அடிக்கும் வீடியோக்கள் நிறைய வருகின்றன. காவல்துறையினரின் இந்தச் செயல்கள் கட்டுப்படுத்தப்படவேண்டும். கேரளாவில் காவல்துறையினர் மீது ஆண்டுக்கு சுமார் 4,500 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் 400 வழக்குகளே பதிவு செய்யப்படுகின்றன. எனவே, காவல்துறையினருக்கு எதிரான புகார்களைப் பெறுவதற்கு மாநிலம் முழுவதும் தனிப் பிரிவு அமைக்கப்படவேண்டும்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!