`வன்செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல!’ - சென்னை மாணவி கொலைக்கு ஓ.பி.எஸ் கண்டனம்

சென்னை மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்துக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். 


சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்த மாணவி அஸ்வினியை, அழகேசன் என்பவர் கத்தியால் குத்தினார். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தால் கே.கே.நகர் பகுதி மொத்தமாக அதிர்ந்தது. கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்த மாணவி அஸ்வினி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரைக் கொலை செய்த அழகேசனைப் பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த அழகேசன் தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவத்துக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்தநிலையில், மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், `சென்னையில் கே.கே.நகர் தனியார் கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது. மனிதநேயமற்ற, மனித உணர்வுகளை மதிக்காத, இத்தகு வன்செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பகுத்தறியும் பண்பான இளம்தலைமுறையால் தமிழகம் தலை நிமிர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!