அரசுப் பள்ளியில் திடீரென வெடித்த காவலரின் துப்பாக்கி! - தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலரின் துப்பாக்கியிலிருந்து திடீரென தோட்டா வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி

தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி  அலுவலகம் ஆகியவை இயங்கி வருகின்றன. தற்போது 11, 12-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. மாணவர்கள் தேர்வு  எழுதிய விடைத்தாள்கள், அடுத்தடுத்து வரும் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆகியவை இப்பள்ளியில் உள்ள அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடைபெற உள்ள 10-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் மதுரையிலிருந்து இப்பள்ளிக்கு இன்று மதியம்  கொண்டுவரப்பட்டு அங்கு ஓர் அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஆயுதப்படையைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணன் என்ற காவலர் ஈடுபட்டிருந்தார். இன்று மாலை பணி முடிந்ததும் மரத்தின் அருகில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து தன் துப்பாக்கியைத் துணியால் துடைத்துக்கொண்டிருக்கும்போது கை தவறி, துப்பாக்கியிலிருந்து தோட்டா சத்தத்துடன் வானத்தை நோக்கி வெளியேறியது.

இதில் யாருக்கும் காயம் இல்லை. மாவட்ட எஸ்.பி மகேந்திரன் மற்றும் போலீஸார் பள்ளிக்குச் சென்று சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். காவலர் அனந்தகிருஷ்ணனைக் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். திடீரென துப்பாக்கி வெடித்ததால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!