வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (09/03/2018)

கடைசி தொடர்பு:22:30 (09/03/2018)

`ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்' - தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம!

பெரியார் சிலையை உடைப்பதாகச் சொன்ன ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனத் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, டி.டி.வி.தினகரன் தலைமையில் தாங்கள் அ.தி.மு.க-வின் உட்பிரிவாகச் செயல்படப் போவதாகவும் அவர் கூறினார்.

தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி

அ.தி.மு.க அம்மா அணியின் கொள்கைப் பரப்புச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``நடிகர்களைப் பார்க்க கூட்டம் கூடும். ஆனால், தேர்தலின்போது அவர்களுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். டெல்லி நீதிமன்றத்தில், எங்களுடைய துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கில் எங்களுக்குச் சாதகமான தீர்ப்புக் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.

அந்தத் தீர்ப்பின்படி நாங்கள் அ.தி.மு.க அம்மா அணியாகச் செயல்பட்டுக் கொள்ளவும் குக்கர் சின்னத்தில் போட்டியிடவும் அனுமதி கிடைத்திருக்கிறது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், 18 எம்.எல்.ஏ-க்களும் அ.தி.மு.க-வின் உட்பிரிவான அம்மா அணியில் சின்னம்மா மற்றும் டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்படும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதனால் உள்ளாட்சித் தேர்தல் மட்டும் அல்லாமல் சட்டமன்றம், நாடாளுமன்றம் என எந்தத் தேர்தல் வந்தாலும் 100 சதவிகித வெற்றியைப் பெற்று நாங்களே உண்மையான அ.தி.மு.க என்பதை நிரூபிப்போம். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. நாள்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. நெடுஞ்சாலைத் துறையில் 4,100 கோடி ரூபாய் மதிப்பிலான 5 டெண்டர்களை எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கு கொடுத்துள்ளார்கள். அதன் மூலமாக அரசுக்கு 1,600 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. நான் சொல்வதில் உண்மை இல்லை என்றால் வழக்கு தொடரட்டும். 

உச்ச நீதிமன்ற உத்தரவு வெளிவந்ததும் நீட் தேர்வை உடனடியாகப் புகுத்திய மத்திய அரசு, அனிதா என்ற மாணவியின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்தது. ஆனால், அதே வேகத்தைக் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு ஏன் காட்டவில்லை. கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்து இப்படிச் செயல்பட்டால் தமிழக மக்கள் பா.ஜ-வுக்கு பாடம் புகட்டுவார்கள். 

மகளிர் மேம்பாடு, தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட பெரியார் சிலையை உடைப்பதாக ஹெச்.ராஜா பேசியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. அவரை குண்டர் சட்டத்தில்கூட கைது செய்யலாம். ஆனால், தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அந்த அளவுக்கு தைரியம் இருக்குமா என்பது தெரியவில்லை’’ என்றார். பேட்டியின் போது மாநில ஜெ.பேரவை இணைச் செயலாளர் பரமசிவ ஐயப்பன், மாவட்டப் புறநகரச் செயலாளர் பாப்புலர் முத்தையா, மாவட்ட மாநகரச் செயலாளர் கல்லூர் வேலாயுதம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.