வெளியிடப்பட்ட நேரம்: 21:28 (09/03/2018)

கடைசி தொடர்பு:21:41 (09/03/2018)

`கல்லூரி மாணவி கொலையில் திடுக் தகவல்கள் - எனக்கு கிடைக்காத நீ... கத்தியால் குத்திய அழகேசன் ஆத்திரம்!'

 எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று ஆத்திரத்தில் கல்லூரி மாணவி அஸ்வினியை அழகேசன் கத்தியால் குத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அழகேசன்

சென்னை மதுரவாயல், தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் மோகன், இவர், இறந்துவிட்டார். இவரின் மனைவி சங்கரி. இவர்களின் மகள் அஸ்வினி. 19 வயதாகும் இவர், கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்தார். இவர், கல்லூரி வாசலில் இன்று பிற்பகலில் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இவரைக் கொலை செய்த வாலிபரைப் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். 

அப்போது சிலர், ஆத்திரத்தில் அந்த வாலிபரை சரமாரியாகத் தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். அந்த வாலிபருக்குத் தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த வாலிபரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் அழகேசன் என்று தெரியவந்தது. மேலும் அவர், சென்னை மாநகராட்சியில் மலேரியா பணியாளராகப் பணியாற்றுவதும் தெரிந்தது. அஸ்வினியும் அழகேசனும் ஒரே பகுதி என்பதால் இருவரும் பழகியுள்ளனர். இருவரும் காதலித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அஸ்வினியின் வீட்டில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அழகேசனுடன் பழகுவதை அஸ்வினி தவிர்த்துவிட்டார். 
கடந்த பிப்ரவரி மாதத்தில் அஸ்வினி வீட்டுக்குச் சென்ற அழகேசன், அஸ்வினியைத் திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதில் நடந்த தகராறில், யாருமே எதிர்பார்க்காத ஒரு காரியத்தை அழகேசன் செய்தார். அதாவது, அஸ்வினி கழுத்தில் தாலிகட்ட முயன்றுள்ளார். அதை வீட்டில் உள்ளவர்கள் தடுத்தனர். 

அஸ்வினி

மேலும், அதுதொடர்பாக அஸ்வினி வீட்டினர் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர், அழகேசனிடம் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தார். அப்போது, அஸ்வினி வீட்டினர் கேட்டுக்கொண்டதன்பேரில் அழகேசனை போலீஸார் கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பினர். 

அதன்பிறகும் அஸ்வினியை டார்ச்சர் செய்துள்ளார். இதனால், ஜாபர்கான்பேட்டை உறவினர் வீட்டுக்கு அஸ்வினி சென்றார். அங்கு இருந்தபடியே கல்லூரிக்குச் சென்றார். இதனால் அவரைச் சந்திக்க முடியாமல் தவித்தார் அழகேசன். கல்லூரிக்கு இன்று பிற்பகல் அழகேசன், அஸ்வினியின் போட்டோவோடு வந்து அங்குள்ளவர்களிடம் விசாரித்தார். அந்தச் சமயத்தில்தான் கல்லூரி முடிந்து அஸ்வினி தோழிகளுடன் வெளியில் வந்தார். அவரிடம் அழகேசன் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அழகேசன், எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கூறியபடி, அஸ்வினியைக் கத்தியால் சரமாரியாகக் குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் அவர் சரிந்தார். இதைப் பார்த்தவர்கள் அலறியடித்து ஓடினர். அடுத்து அழகேசன் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார். அப்போதுதான் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அழகேசனைத் தாக்கியுள்ளனர். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அஸ்வினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு வந்த அஸ்வினியின் அம்மா, கதறித்துடித்தார். அப்போது `அழகேசனுடன் பழகாதே பேசாதே என்று பல தடவைச் கூறினேன். ஆனால் நீ கேட்கவில்லையே. படுபாவி என் மகளை இப்படி கொலை செய்துவிட்டானே’ என்று சங்கரி கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக அமைந்தது. சங்கரியின் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. அவர் வீட்டு வேலைசெய்துதான் குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார். அஸ்வினியின் தம்பி அபினேஷ், ஐ.டி.ஐ படிக்கிறார். போலீஸில் அழகேசனைக் குறித்து புகார் கொடுத்ததும் அவர் பயந்தார். ஆனால், அதன்பிறகு மீண்டும் அஸ்வினிக்கு தொல்லை கொடுத்து அவரது உயிரையும் எடுத்துவிட்டதாக அஸ்வினியின் உறவினர்கள் தெரிவித்தனர்.