வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (09/03/2018)

கடைசி தொடர்பு:23:30 (09/03/2018)

ஆயுஷ் மருத்துவப் படிப்பிற்கும் நீட் தேர்வு கட்டாயம்!

கடந்த ஆண்டு பொது மருத்துவத்திற்கும், பல் மருத்துவத்திற்கும் நீட் தேர்வு கொண்டு வந்ததை போல இந்த ஆண்டு சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம், யோகா, யுனானி போன்ற ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்கிறார்கள். ஆனால் மாநில அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என கடிதம் அனுப்பி இருக்கிறது. கடந்த ஆண்டைப்போல மாணவர்கள் மாநில அரசை நம்பாமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து நீட் தேர்வு எழுத வேண்டும். ஆனால் இந்த நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள் ஆயுஷ் மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து சிவராஜ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் முதல்வரும், தமிழ்நாடு ஹோமியோ மருத்துவ கவுன்சில் முன்னாள் உறுப்பினருமான டாக்டர் கண்ணன் கூறுகையி, ''கடந்த ஆண்டு பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு மத்திய அரசு நீட் தேர்வு உண்டு என்றும் மாநில அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று இழுத்துக் கொண்டிருந்தது. இறுதியாக நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இதனால் மருத்துவம் படிக்க இருந்த தமிழக மாணவ, மாணவிகள் பெரிய பாதிப்புகளுக்கு உள்ளானார்கள்.

இதேபோல இந்த ஆண்டு சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம், யோகா, யுனானி போன்ற ஆயுஷ் மருத்துவத் துறையிலும் நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அதையடுத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மாநில அரசுகளுக்கு  சுற்றறிக்கை  மத்திய அரசு அனுப்பி இருக்கிறது. இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மாநில அரசு கோரிக்கை வைத்திருக்கிறது.

இது நிறைய மாணவர்களுக்கு தெரியாது. மாணவர்கள் ஆயுஷ் மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வு இருந்தாலும், இல்லையென்றாலும்  வரும் 12ம் தேதி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள். அதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளுகிறோம். அதேவேளையில் மத்திய அரசு தொடர்ந்து அனைத்து துறைகளுக்கு நீட் தேர்வு கொண்டு வருவதன் மூலம் ஏழை, கிராமப் புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும், தமிழகத்தில் அனிதாவிற்கு ஏற்பட்ட நிலை இன்னொருவருக்கு வரக் கூடாது'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க