அய்யாக்கண்ணு போன்றோர்களால் தமிழ் பெண்களுக்கு பாதுகாப்பில்லை..! தமிழிசை காட்டம்

பெரியவர் அய்யாக்கண்ணு, தகாத கெட்ட வார்த்தை கூறி, சிறியவர் போல் நடந்துகொண்டதால்தான் நெல்லையம்மாள் செருப்பை துாக்கி காண்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் என பா.ஜ.க தமிழக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.  

திருச்செந்தூரில், அய்யாக்கண்ணுவுக்கும், பா.ஜ.க பெண் நிர்வாகி நெல்லையம்மாளுக்கும், நடந்த கை கலப்பில் அய்யாக்கண்ணு தாக்கப்பட்டார். ஆனால் நெல்லையம்மாள், தன்னை அய்யாக்கண்ணு தாக்கியதாக மருத்துவமனையில் சேர்ந்தார். இன்று மருத்துவமனையில் அவரை, தமிழிசை நேரில் சந்தித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛அய்யாக்கண்ணுவும் அவருடன் வந்த விவசாயிகளும், எங்களின் பெண் நிர்வாகியை தாக்கியதால், அவர் மூச்சு விட சிரமப்பட்டு நெஞ்சுவலிக்குள்ளாகி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எந்தப் பெண்ணும் காதில் கேட்க முடியாத வார்த்தையை அய்யாக்கண்ணு சொல்லியதால் தான், அதை பொறுக்க முடியாத நெல்லையம்மாள் ஆத்திரமடைந்து எதிர்வினையாற்றியிருக்கிறார். அவர் மட்டுமல்ல, தமிழகத்தில் எந்த பெண் மீதும், அத்தகைய கொடிய வார்த்தை வன்முறை வீசப்பட்டால் புலி போல் வெகுண்டு எழதான் செய்வாள். தனது மானத்திற்கும் சுயகவுரவத்திற்கும் இழுக்கு ஏற்படும்போது எந்தப் பெண்ணும் எதிர்வினையாற்றலாம் என சட்டமே அனுமதிக்கிறது.

கோவில் வளாகத்தில் அய்யாக்கண்ணுவையும் அவர் சார்ந்தவர்களையும் அனுமதித்து, பிரச்சாரம் செய்ய அனுமதித்ததும், பக்தர்களின் மனதை திசைதிருப்பும் வகையில் துண்டுபிரசுரம் வழங்க அனுமதித்ததும் தவறு. அதைத்தடுப்பதற்கு சென்ற எங்களின் பெண் நிர்வாகியை அவர்கள் தாக்க முயற்சித்தது மட்டுமின்றி, மோசமாக கெட்டவார்த்தைகளால் திட்டியதும் தவறு. இவ்வளவு தவறுகளையும் செய்த அய்யாகண்ணு மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையைக் கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த இருக்கிறேன். பெரியவர் அய்யாக்கண்ணு, தகாத கெட்ட வார்த்தை கூறி,  சிறியவர் போல் நடந்துகொண்டதால் தான் நெல்லையம்மாள் செருப்பை துாக்கி காண்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். மனதில் எவ்வளவு வக்கிரம் இருந்தால் அப்படி பட்ட வார்த்தை வரும். பெண்களை யார் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாமா? பெண்கள் என்ன கிள்ளு கீரையா?

திருச்சியில் உஷாவின் வீட்டிற்கு சென்று வந்தேன். இப்போது, சென்னையில், கல்லுாரி மாணவி பட்டப்பகலில் கயவன் ஒருவனால் கொடுரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறாள். இப்படி தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு காவல்துறையின் அலட்சியம்தான் காரணம். இந்த மகளிர் தினத்தில் நான் வலியுறுத்தியதே பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பது தான். தமிழக முதல்வர் உடனடியாக, தலையிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடராமல், காவல் துறைக்கு உத்தரவிடவேண்டும்' என்று தெரிவித்தார்.    .  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!