வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (10/03/2018)

கடைசி தொடர்பு:00:30 (10/03/2018)

''சூழ்ச்சிக்கு பலியாகி விடக்கூடாது..! எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

காவிரி

தமிழ்நாடு - கர்நாடகா இடையே நடக்கும் காவிரி நதிநீர் வழக்கில், உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 16-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கியது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த வரும்படி தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளுக்கு மத்திய நீர்வள அமைச்சகம், அழைப்பு விடுத்து இருந்தது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கலந்து கொண்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை. எனவே, இதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உச்சநீதிமன்ற தீர்ப்பில், காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை செயல்படுத்துவதற்கு மேலாண்மை வாரியத்துடன் கூடிய செயல்திட்டத்தை அமைக்க வேண்டும் என்பது மிகத்தெளிவாக இருக்கிறது. அதாவது, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்', என்ற நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறதே தவிர, தனது தீர்ப்பின் எந்த இடத்திலும் 'ஸ்கீம்' என்பது வேறு, 'காவிரி மேலாண்மை வாரியம்' என்பது வேறு என்று குறிப்பிடவில்லை.

 ஆகவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து நீர்ப்பங்கீட்டிற்கான செயல்திட்டத்தை நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செய்ய வேண்டிய மத்திய அரசு, 'ஆலோசனைக் கூட்டம்', 'கருத்துக் கேட்பு' நடத்தி, 'செயல் திட்டமா - காவிரி மேலாண்மை வாரியமா' என்றெல்லாம், கர்நாடக மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து அந்த மாநில அரசோடு போட்டிப்போடும் வகையில், வெவ்வேறு பொருள்பட தேவையற்ற விவாதங்களை மேற்கொண்டு, தேவையற்ற காலதாமதம் செய்து, உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடுவில் மூன்று வாரத்தை ஏற்கனவே வீணடித்து விட்டது.

இதில், ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்’, மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி.சிங், 'உச்ச நீதிமன்றம் செயல்திட்டம் பற்றி கூறுகிறது, காவிரி மேலாண்மை வாரியம் பற்றி கூறவில்லை', என்று கூறியிருப்பது, தமிழகத்தை வஞ்சிக்கும் பா.ஜ.க அரசின் மனப்பான்மையை வெளிக்காட்டுகிறது. இதற்கிடையில், 'ஸ்கீம்தான் என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது', என கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் பேட்டியளித்து இருக்கிறார். இந்நிலையில், இன்றைக்கு டெல்லியில் நடைபெற்ற தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழக அரசு வைத்துள்ள வாதங்கள் அரசின் பத்திரிக்கை குறிப்பில் வெளி வந்திருப்பதுதானா அல்லது கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் பேட்டியளித்திருப்பது போன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதா, என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே, தமிழக அரசின் சார்பில் அந்தக் கூட்டத்தில் எழுத்துபூர்வமாக எடுத்துவைத்த கருத்தையும் வாதத்தையும், அதற்கு மத்திய அரசு அளித்த பதிலையும், தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக, பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் 22.2.2018 அன்று கூடிய அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, உரிய அரசியல் அழுத்தத்தை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்குக் கொடுக்க வேண்டும். எந்தவித சூழ்ச்சிக்கும் பலியாகிவிடக் கூடாது. உடனடியாக தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்', என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க