''கலை நிகழ்ச்சிகள் நடத்த நிதியுதவி..!'' இயல் இசை நாடக மன்றம் அறிவிப்பு

கலைஞர்கள்

தன்னார்வக் கலை நிறுவனங்களின் வாயிலாக இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தின்கீழ், பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, கதாகாலட்சேபம் மற்றும் நாதசுரம், தனி வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்தியம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரினெட் ஆகிய இசைக்கருவிக் கலைஞர்களுக்கும், பக்கவாத்தியங்களான வயலின், மிருதங்கம், கஞ்சிரா, கடம், முகர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளைச் சார்ந்த கலைஞர்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்திட நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நிதி உதவி பெறுவதற்கான, 'தகுதிகள் என்ன? எப்படி விண்ணப்பிப்பது?' என்று தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''01.03.2018 தேதியில் 16 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். மேடையில் தனித்து நிகழ்ச்சி நடத்தும் அனுபவம் மிக்கவராக இருத்தல் வேண்டும். நேர்முகத் தேர்விற்கு வருவதற்கான பயணப்படி, ஏதும் வழங்கப்பட மாட்டாது. ஏற்கனவே, இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்றவர்களுக்கு மீண்டும் அதே பிரிவின்கீழ் நிகழ்ச்சி நடத்திட வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது.

விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றது தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்பும் கலைஞர்கள் சுயமுகவரியிட்ட உறையில் ரூ.10/-க்கான தபால் தலை ஒட்டி மன்றத்திற்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். உறுப்பினர்-செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-600 028. தொ.பே. 044 – 2493 7471. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 18.04.2018 மாலை 5.00 மணிக்குள் அல்லது அதற்கு முன்னரோ மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும், விண்ணப்பங்களை நேரிலும் அளிக்கலாம். விண்ணப்பங்களை www.tneinm.in என்ற இணையத் தளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!