'நமது நடவடிக்கைகளை அனைத்து ஊடகங்களும் கவனித்து வருகிறது' - ரசிகர்களுக்கு ரஜினி அட்வைஸ்!

ரஜினி ரசிகர் மன்றம் - ரஜினி மக்கள் மன்றம் பொறுப்பாளர்களை நியமனம் செய்யும் ஆலோசனைக் கூட்டம் நேற்று மயிலாடுதுறையில் நடைபெற்றது.  

ரஜினி ரசிகர் மன்றம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட பொறுப்பாளர் ரஜினி பாஸ்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  இதில் ரஜினி மக்கள் மன்ற மாநில பொறுப்பாளர் சுதாகர், மாவட்டச் செயலாளர் ராஜு மகாலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  தனியார் விடுதி ஒன்றில் நடந்த இக்கூட்டத்திற்கு கலந்துகொள்ள வந்தவர்களை வரவேற்க நகரமெங்கும் பிளக்ஸ் போர்டுகள், தோரணங்கள், அலங்கார வளைவுகள் என திராவிடக் கட்சிகளைத் தாண்டி விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  இன்று காலையில் திருவாரூர் மாவட்டத்திற்கும் மதியம் நாகை மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.  

இந்த கூட்டத்தின் நோக்கம் என்ன? என்று பொறுப்பாளர் ஒருவரிடம் பேசியபோது, "உதாரணத்திற்கு திருவாரூர் மாவட்டத்தில் 10 ஒன்றியங்கள், 4 நகரங்கள் உள்ளன.  இதில் 145 பேர் மன்ற பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட உள்ளனர்.  இவர்களை 10 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஆட்களை நியமிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  இது தவிர மாவட்ட அளவில் வழக்கறிஞர், மகளிர், விவசாயிகள், இளைஞர், மீனவர் என ஒவ்வொரு அணிக்கும் ஒரு தலைவர் நியமிக்கப்படவுள்ளார்.  இதுபோலவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் அனைவரும் ரஜினி மக்கள் மன்ற அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துவார்கள்.  இதனால் தேர்தலைத் தைரியமாக எதிர்க்கொள்வோம், வெற்றிப் பெறுவோம்" என்றார்.  

இந்த நிகழ்வுகளுக்கு முன், ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களும் அரங்கில் கூடிய பின்பு ரஜினி பேசிய வீடியோ காட்சி காட்டப்படுகிறது.  இதில் ரஜினி, "ரசிகர் மன்றமாக இயங்கி வந்த நாம், இனி அரசியல் அரங்கில் செயல்பட போகிறோம்.  நமது நடவடிக்கைகளை அனைத்து ஊடகங்களும், அரசியல் கட்சியினரும் உற்றுக் கவனித்து வருகின்றனர்.  நம்மிடையே மனகசப்பு இருக்கலாம்.  சிலருக்குப் பதவிகள் கிடைக்கலாம், சிலருக்குக் கிடைக்காமல் போகலாம்.  இவை எதுவும் நிரந்தரமில்லை எதுவும் மாறலாம்.  எனவே, அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்களுக்காக மக்கள் தொண்டாற்ற செயல்பட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.  ரஜினியின் பேச்சு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!