'தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை' - நெல்லையில் சோகம்! | a tasmac owner suicide by shooting himself

வெளியிடப்பட்ட நேரம்: 23:52 (09/03/2018)

கடைசி தொடர்பு:23:52 (09/03/2018)

'தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை' - நெல்லையில் சோகம்!

நெல்லையில் டாஸ்பாக் பார் உரிமையாளர் ஒருவர் குடும்ப பிரச்னை காரணமாக துப்பாகியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை செய்த துரைப்பாண்டி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நாலாந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர், துரைப்பாண்டியன். 55 வயது நிரம்பிய இவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பே தொழில் வாய்ப்புக்காக சென்னைக்குச் சென்று விட்டார். அங்கு ரியல் எஸ்டேட் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். சென்னை விருகம்பாக்கத்தில் மனைவி அமச்சியார், மகன்கள் பாலமுருகன், முத்துப்பாண்டியன், மகள் பிரியா ஆகியோருடன் வசித்து வந்தார். அத்துடன், நெல்லையில் டாஸ்மாக் மதுக்கடையின் பார் நடத்தி வந்தார். 

துரைப்பாண்டியனின் மகள் பிரியாவுக்கு திருமணமாகி விட்டது. மூத்த மகன் பாலமுருகன் டாக்டராக உள்ளார். அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. வரும் மே மாதம் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான நிச்சயதார்த்தம் கடந்த 10 தினங்களுக்கு முன்பு நடந்துள்ளது. இளைய மகன் முத்துப்பாண்டி மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். மூத்த மகனின் திருமண ஏற்பாடுக்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் நெல்லைக்கு வந்துள்ளார்.

நெல்லையில் சி.என்.கிராமத்தில் குறுக்குத்துறை மெயின்ரோடு பகுதியில் உள்ள வீட்டில் அவர் தங்கியிருந்து உறவினர்களைச் சந்தித்து வந்தார். இந்த நிலையில் இரவு அவரது அறையில் இருந்து துப்பாக்கி வெட்டிக்கும் சத்தம் கேட்டு அச்சமுற்ற கார் டிரைவர் அறைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது நெஞ்சில் குண்டு காயத்துடன் அவர் உயிருக்கு போராடியிருக்கிறார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட உறவினர்கள் சோகம் அடைந்தனர். 

துரைப்பாண்டியன் குடும்ப பிரச்னை மற்றும் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அவரது தற்கொலை குறித்து அறிந்ததும் உறவினர்கள் அனைவரும் மருத்துவமனை முனபாக திரண்டனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த தற்கொலைச் சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.