வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (10/03/2018)

கடைசி தொடர்பு:02:30 (10/03/2018)

குட்டையில் மீன் பிடிக்க சென்ற சிறுவர்கள் பலி - திருப்பூர் அருகே சோகம்!

திருப்பூர் அருகே குட்டையில் மீன் பிடிக்க சென்ற 12-ம் வகுப்பு மாணவன், நண்பருடன் சேர்ந்து நீரில் மூழ்கி பலியாகியிருக்கும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை உண்டாக்கியிருக்கிறது.

சிறுவர்கள் பலி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அமைந்துள்ளது சின்னூர். இப்பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி வெள்ளியங்கிரி என்பவரின் மகன் ஜெய்பிரகாஷ், வதம்பச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது ஜெய்பிரகாஷ்க்கு பொதுத்தேர்வு நடந்து வரும் சூழலில், நேற்று விடுமுறை என்பதால், தன் வீட்டருகே வசிக்கும் மூவேந்தர் என்ற சிறுவனுடன்
இருசக்கர வாகனத்தில் கிளம்பி ஆராக்குளம் என்ற பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றுள்ளான். இந்நிலையில் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற இருவரும் பல மணிநேரங்கள் கடந்தும் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த பெற்றோர் அப்பகுதி முழுவதும் அவர்களை தேடியிருக்கிறார்கள். ஆனால் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் ஆராக்குளம் குட்டையில் தேடுதல் பணியை நடத்தியபோது, மாணவர்கள் ஒட்டி வந்த இரு சக்கர வாகனம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்துள்ளனர். பின்னர் அப்பகுதி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு துறையின் உதவியுடன், குட்டைக்குள் தேடுதல் நடத்தி, மாணவர்களின் உடலை மீட்டெடுத்தனர். இருவரும் குட்டை நீரில் தவறுதலாக விழுந்து மூழ்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பின்னர் இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.