வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (10/03/2018)

கடைசி தொடர்பு:03:30 (10/03/2018)

திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய இலங்கை அகதிக்கு 7 ஆண்டு சிறை!

மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்த பெண் அகதியை மானபங்கம் செய்து கர்ப்பமாக்கிய இலங்கை அகதி இளைஞருக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இலங்கை அகதி

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கை அகதியான குணபாலசிங்கத்தின் மகன் பிரசாத்(24) என்பவரும் அதே அகதிகள் முகாமில் வசித்து வந்த யோகநாதன் மகள் சுகன்யா(24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.  இந்நிலையில் சுகன்யாவை திருமணம் செய்து கொள்வதாக கூறிய பிரசாத் அவருடன் உறவு கொண்டதையடுத்து சுகன்யா கர்ப்பிணியானார். கர்ப்பிணியான சுகன்யாவை பிரசாத் திருமணம் செய்து கொள்ள மறுக்கவே சுகன்யா ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி கடந்த 2012 -ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது சுகன்யாவுக்கு 4 மாத பெண் குழந்தை இருந்தது. அக்குழந்தைக்கு மரபணு சோதனையும் செய்யப்பட்டதில் பிரசாந்துக்கும், சுகன்யாவுக்கும் பிறந்தது என்பதும் உறுதியானது. இவ்வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியும், மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும் பொறுப்பு வகிக்கும் ஏ.கயல்விழி சுகன்யாவை மானபங்கம் செய்த குற்றத்திற்காக பிரசாந்துக்கு 7 ஆண்டு சிறைத் தண்டையும் ரூ.26 ஆயிரம் அபராதமும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய குற்றத்துக்காக ஒரு வருட சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். அபராதத் தொகை ரூ.31 ஆயிரத்தில் ரூ.30 ஆயிரத்தை பிரசாந்த் சுகன்யாவுக்கும் ரூ.ஆயிரத்தை வழக்குச் செலவுக்காகவும் பிரசாந்த் கொடுத்து விட வேண்டும் எனவும் சிறைத்தண்டனை ஆண்டுகள் மொத்தம் 8 ஆண்டுகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்திருப்பதாகவும் நீதிபதி ஏ.கயல்விழி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.