''டெல்லி காவிரி கூட்டத்தில் நடந்தது என்ன..?'' தமிழக அரசு விளக்கம்

''மத்திய நீர்வள அமைச்சகத்தால் புது டில்லியில் நடத்தப்பட்ட கூட்டத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்திட வேண்டும்'' என்று தமிழ்நாடு அரசால் வலியுறுத்தப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம்

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், இன்று (9.3.2018) புதுடில்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு, 'காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு' ஆகியவற்றை ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், காவிரி நடுவர் மன்றத்தின் ஆணைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு, அனைத்து அதிகாரங்களும் கொண்டதாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகள் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவிரி தொழில் நுட்பக் குழுமத் தலைவர் ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்சநீதி மன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று (சனிக்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவசர கூட்டம் நடைபெறுகிறது. மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!