வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (10/03/2018)

கடைசி தொடர்பு:04:30 (10/03/2018)

'அரசுப்பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பிய நகராட்சி நிர்வாகம்' - கும்பகோணத்தில் பரபரப்பு!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதற்கு கும்பகோணம் நகராட்சி நிர்வாகம் சமீபத்தில் அனுப்பிய ஒரு நோட்டீஸ் இப்பகுதி மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளி

தாராசுரம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் இந்த பள்ளியில் படித்து வருகிறார்கள். முன்பு இரண்டாயிரம் மாணவர்களுக்கு மேல் படித்து வந்த இந்த பள்ளியில் தற்பொழுது 750 மாணவர்கள் மட்டுமே படித்து வருகிறார்கள். பல்வேறு நெருக்கடியான சூழல்களுக்கு மத்தியில் தான் இந்த பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் கடந்த சில நாள்களுக்கு முன்பு கும்பகோணம் நகராட்சி நிர்வாகம்  பள்ளிக்கு அனுப்பியுள்ள ஒரு நோட்டீஸ் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

அது என்னவென்றால், "பதினோராம், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் ஒரு அடி பரப்பு, நகராட்சி சொந்தமான வடிவாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்பது தான். இதற்காக நகராட்சி அதிகாரிகள், தனிப்பட்ட முறையில் பள்ளியின் ஆசிரியர்களை சந்தித்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ஒரு அடி இடத்தை ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்கள். 

ஆனால், ஒரு அடி இடத்தை வெற்றிடமாக ஒப்படைக்க வேண்டுமென்றால் முழு கட்டடத்தையும் இடிக்க வேண்டிவரும். இது சாத்தியமே இல்லை. கும்பகோணத்தில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட பல குளங்களையும் நகராட்சிக்கு சொந்தமான இடத்தையும் ஆக்கிரமித்து பல நட்சத்திர ஹோட்டல்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. அதையெல்லாம் கண்டுகொள்ளாத நகராட்சி அதிகாரிகள், அரசு பள்ளியின் மீது, அதுவும் ஒரு அடி ஆக்கிரமிப்பு கட்டடத்தின் மீது சீறிப்பாய்கிறார்கள். இது கொஞ்சம் கூட நியாயம் இல்லை” என மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.