வெளியிடப்பட்ட நேரம்: 08:27 (10/03/2018)

கடைசி தொடர்பு:08:27 (10/03/2018)

குப்பைகள் நிறைந்த கண்மாய்; கண்டுகொள்ளாத தங்க.தமிழ்செல்வன்..! பொதுமக்கள் வேதனை

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது நாராயணதேவன் பட்டி தான் தங்க தமிழ்ச்செல்வன் சொந்த ஊர். இங்கிருக்கும் கேசவபுரம் கண்மாய் மிகப்பெரிய பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. இதன் தண்ணீரால், பல நூறு ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும் அருகில் உள்ள கிராமங்களில் குடிநீர் ஆதாரமாகவும், நிலத்தடிநீர் முக்கியத்துவம் வாய்ந்த கண்மாயாகவும் விளங்குகிறது. முதலில் இந்த கண்மாய் கரைகளில் குப்பைகளை கொட்டி வந்த நிலையில் தற்போது கண்மாய்க்குள்ளும் குப்பைகள் கொட்டப்பட்டுவருகிறது. இதுகுறித்து இக்கிராம மக்கள் கூறும் போது, `` ஊராட்சிக் குப்பைகள் அனைத்தும் கண்மாயில் கொட்டப்படுகிறது. சில நேரங்களில் குப்பைகளுக்கு தீ வைத்துவிடுகிறார்கள். இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

தங்க தமிழ்ச்செல்வன் சொந்த ஊர்

எத்தனையோ போராட்டம் நடத்திப் பார்த்தோம். எந்த பலனும் இல்லை. யார் யாரிடமோ சொல்லிப் பார்த்தோம் எதுவும் நடக்கவில்லை. நாராயணதேவன் பட்டி தங்க தமிழ்ச்செல்வன் பிறந்த ஊர். மேலும், இந்த கண்மாயில் தான் தங்க தமிழ்ச்செல்வன் சிறுவயதில் விளையாடுவார். இவ்வளவு ஏன் இந்த கண்மாயையும், அதன் கரையில் கொட்டப்படும் குப்பைகளையும் கடந்து தான் அவரது வீட்டிற்குச் செல்ல வேண்டும். எரியும் புகையில் தான் இந்த இடத்தை கடந்து செல்வார். அதிகாரத்தில் இருந்த போதும், இல்லாத இந்நிலையிலும், கண்மாயை பற்றி கவலைப்பட்டதே இல்லை. ஜெயலலிதா பிறந்த நாளில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் தங்கத்தமிழ்ச்செல்வன், இரண்டு கிராம் தங்க மோதிரம் கொடுத்ததாக கேள்விபட்டோம். அந்த பணத்தில் கண்மாயை மீட்டு குப்பை கொட்ட மாற்று இடம் ஏற்பாடு செய்து, கண்மாயை தூர்வாரி இருந்தால் குடிக்க தண்ணீரும் கிடைத்திருக்கும், ஊரும் சுத்தமாக இருந்திருக்கும்`` என்று வேதனை தெரிவித்தனர். சொந்த ஊருக்கு செய்வதற்கு அதிகாரத்தில் இருக்க வேண்டுமா என்ன? கவனத்தில் எடுத்துக்கொள்வாரா தங்க தமிழ்ச்செல்வன்?