வெளியிடப்பட்ட நேரம்: 06:10 (10/03/2018)

கடைசி தொடர்பு:06:10 (10/03/2018)

''அன்று நான் கூறியது; இன்று நடந்து விட்டது..!'' வைகோ சொன்னது என்ன?

வைகோ

''அன்று நான் கூறியது, இன்று நடந்து விட்டது. தமிழ்நாட்டுக்கு மிகமிக சோதனையான காலம் இது'' என்று காவிரி நதிநீர் பிரச்னை குறித்து வைகோ தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், ''கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷாவும், மிகத் தந்திரமாகக் காய்களை நகர்த்துகின்றார்கள். அதன் எதிரொலிதான், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வின் தீர்ப்பு.

இந்தத் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் வாசங்கள் இல்லை; அத்துடன், அதற்காக மத்திய அரசு ஒரு திட்டத்தை வகுக்கலாம்; அந்தத் திட்டத்திலும் நாடாளுமன்றத்தில் மாறுதல்கள் செய்து கொள்ளலாம் என்று கூறி இருப்பது, மேலாண்மை வாரியத்தைப் புறக்கணிப்பதற்காகச் சொல்லப்பட்ட தீர்ப்பு ஆகும். இதனையே காரணமாகக் காட்டி, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், தமிழ்நாட்டுக்குப் பச்சைத் துரோகம் செய்யப் போகின்றது; நரேந்திர மோடி அரசில் தமிழகத்திற்கு நீதி கிடைக்காது என்று சொன்னேன். அன்று நான் கூறியது, இன்று நடந்து விட்டது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழ்நாட்டுக்கு உள்ளேயே வந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியம் அற்றது என்று, தமிழர்களைத் துச்சமாகக் கருதிச் சொல்லிவிட்டுப் போனார். எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைச் சந்திக்க தமிழக முதல்வர் எவ்வளவோ முயன்றும், பிரதமர் அந்தக் கோரிக்கையைக் குப்பைத்தொட்டியில் தூக்கி எறிந்து விட்டார். 

தமிழகத்தைப் பஞ்சப் பிரதேசமாக ஆக்கி, கார்பரேட் கம்பெனிகள் இலட்சக்கணக்கான ஏக்கர்களை அடிமாட்டு விலைக்கு வாங்க வகுக்கப்பட்டுள்ள திட்டத்தைச் சில ஆண்டுகளுக்குள் செயல்படுத்த முனைவார்கள். தமிழ்நாட்டுக்கு மிகமிக சோதனையான காலம் இது. எனவே, சட்டப்பேரவைக் கூட்டம் 15-ஆம் தேதி நடைபெறுவதாக இருப்பினும், அதற்கு முன்பே, அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தைத் தமிழக முதல் அமைச்சர், உடனடியாகக் கூட்ட வேண்டுகிறேன்'' என்று கூறியுள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க