வறுமையில் வாடும் கலைமாமணி விருதுபெற்ற கொல்லங்குடி கருப்பாயி

 “ஏழு வயசுல நானே சொந்தமா மெட்டு போட்டு வாய்க்கு வந்ததைப் பாட ஆரம்பிச்சு, கலைமாமணி விருது வாங்கற அளவுக்குப் பேரும் புகழுமாக கொடிகட்டிப் பறந்தேன். ஆனா, இன்னைக்கு இடிஞ்சு கிடக்கிற வீட்டைக்கூட சரிபண்ண வழியில்லாம, வாங்கின கடனை அடைக்கமுடியாம கஷ்டத்தை விழுங்கிக்கிட்டு உசுரோடு இருக்கேன்'' என வேதனையுடன் ஒலிக்கிறது அந்தக் குரல். 

கொல்லங்குடி கருப்பாயி என்ற பெயரை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமுடியுமா? சிவகங்கை அருகிலுள்ள கொல்லங்குடியில் அவரது வீட்டில் சந்தித்தோம. வயது 75 தாண்டினாலும், குரலில் அதே கம்பீரம். நடந்தாலும் பாட்டு; அமர்ந்தாலும் பாட்டு எனப் பாடுவதையே தன் உயிர் மூச்சாகக் கொண்டிருக்கிறார் கருப்பாயி.

kollangudi karuppayi
  ‘'அம்மா, அப்பா என்னைய படிக்க வைக்கலே. சாணி அள்ளறது; மாடு மேய்க்கிறது; ஊர்மந்தையில் விளையாடி பொழுதைக் கழிக்கிறதுனு என் இளமைக் காலம் போச்சு. ஏழு வயசுலேயே ஆடு மாடு மேய்க்க போற காட்டுல வாய்க்கு வந்த வார்த்தைகளை வெச்சுப் பாடிட்டிருப்பேன். அந்தக் காலத்துல அந்தப்புரத்துலயா இருந்தேன்? வெயிலும் நாங்களும் சமமாக திரிவோம்.

காளையார்கோயில், நாட்டரசன்கோட்டை, கொல்லங்குடி காளி கோயில் திருவிழா நடக்கும்போது ஜோடி பெண்களாக கும்மி கொட்டுவாங்க. நாங்க அந்த டீம்ல சேராம தனியாக கும்மி பாட்டுப் பாடுவோம். சின்னபிள்ளையாக இருக்கும்போதே, செத்தவுங்களுக்கு மாரடிக்கிற பாட்டுப் பாடுவேன். ஓப்பாரி பாட்டு நல்லா பாடுவேன். எம்.ஜி.ஆர், ராஜீவ் காந்தி இறந்தப்ப நான் மாரடிச்சு பாடினதை ஊரே மூக்கு மேல விரல்வெச்சு கேட்டுச்சுன்னா பாருங்களேன்'' என்றவர், தனது கதையைத் தொடர்கிறார்.

கல்யாணம்:

பர்மா கலவரம் நடந்தபோது என் அத்தை, மாமா பிள்ளைகள் எல்லாம் கால்நடையாகவே கொல்லங்குடிக்கு நடந்து வந்தாங்க. அப்படி வந்தவருதான் என் மன்னவரு. அப்போ எனக்கு 14 வயசு இருக்கும். என் கணவர் நல்லா படிச்சவரு. கொல்லங்குடி கிராமத்துக்குக் கணக்குப் பிள்ளையாக இருந்தவரு. என் அத்தை மகன் செல்லையா. நான் கலைமாமணி விருது வாங்குற அளவுக்கு நாட்டுப்புறப் பாட்டுல உயர்ந்ததுக்கு காரணம் அவர்தான். என்னைய நாட்டுப்புறப் பாட்டு பாடுறதுக்கு ஊக்கப்படுத்துவாரு. புருசனும் பொண்டாட்டியும் நல்லா உழைச்சோம். எங்களுக்குக் கடவுள் ஒரு பிள்ளையைக் கொடுக்கலே. என் அக்கா மகள்தான் என்னையை கவனிச்சுக்கிட்டு இருந்தா. அவளும் கார் விபத்துல இறந்துப் போயிட்டா. இப்போ, அவளோட மகள் வாசுகிதான் என்னைய பார்த்துக்குறா.

kollangudi karuppay


கணவரின் மரணம்:

கணவன் மனைவின்னா இவுங்கள மாதிரி இருக்கணும்னு சொல்ற அளவுக்கு அன்போடு இருந்தோம். ஒருநாள் நாங்க ரெண்டு பேரும் காளையார்கோயிலுக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்தோம். அப்போ, லெட்டர் ஒண்ணு வந்திருந்துச்சு. அதைப் படிச்சு பார்த்துட்டு, 'ஏம்மா மதுரை வானொலியில ரெக்கார்டிங் இருக்கு. நாளைக்கு வரச்சொல்லியிருக்காங்க. போயிடுவோம்;னு சொன்னாரு. ‘எனக்குத் தொண்டை சரியில்லை. காளையார்கோயில் போய் அடுத்த முறை வருறோம்னு தந்தி அடிச்சுட்டு வாங்க'னு சொன்னேன். அதுக்கு அவரு ‘ஏம்மா இந்த கருப்பாயிக்கு மண்டைக்கனம் அதிகமாயிருச்சுனு நினைச்சுவாருங்க. அதனால, ரிக்கார்டிங் போயிடுவோம்'னு சொல்லி, மதுரை வானொலிக்கு கூட்டிக்கிட்டு போனாரு.

கூடல்நகருக்குப் போயிட்டோம். கத்தரி வெயிலு மண்டையைப் பிளக்குது. அந்த வெயில்ல நடந்து போகும்போது எமனா வந்தான் டிராக்டர்காரன். என் சாமியை அடிச்சு தூக்கிட்டான்ப்பா. நான் கத்துறேன்; கதறுறேன்; என்னானு கேட்க நாதியில்லை. எப்படியாவது என் சாமியைக் காப்பாத்திடலாம்னு, வானொலி ஆபீஸ்க்கு ஓடிப்போயி கத்துறேன். ஆனால், யாருமே வரலை. மனிதாபிமானமே இல்லாத ஆள்களை அங்கேதான் பார்த்தேன்'' என்கிறவர் கண்கலங்கும்போது, நம் இதயம் கனக்கிறது. 

சினிமா வாய்ப்புகள்:

'ஆண் பாவம்' நான் நடிச்ச முதல் படம். அதுக்கு அப்புறம் பல படங்கள் நடிச்சேன். இதில், சம்பளம் கொடுத்தவங்களைவிட ஏமாத்தினவங்கதான் அதிகம். ஆயிரம் ரூபாயைக் கையில் கொடுத்துட்டு, 'ஊருக்குப் போங்க அனுப்பி வைக்கிறோம்'னு சொல்வாங்க. நானும் எதிர்பார்த்து காத்திருப்பேன். ஒண்ணும் வராது. சினிமாவுல நடிக்கபோய் என்னை மொட்டையடிச்சு அனுப்பினதுதான் மிச்சம்.

kollangudi karuppay


நடிகர்களும் நடிகர் சங்கமும்:

எனக்குப் பிள்ளை இல்லைங்கிற குறையைப் போக்கி தலைமகனாக இப்பவும் இருக்கிறது நடிகர் பாண்டியராஜன்தான். சென்னைக்கு போனால், என்னைப் பார்க்காம இருக்காது. நான் சினிமாவுல நடிக்கும்போது என்னையை யாரும் நடிகர் சங்கத்துல சேர்க்கலை. பேரன் விஷால் வந்த பிறகுதான், உறுப்பினராக்கி அடையாள அட்டை கொடுத்துச்சு. இன்னைக்கு நான் சாப்பிடுற சாப்பாடு, பேரான்டி விஷால் கொடுக்குற பணம்தான். என்னை வாழவைக்கிற சாமி அது. விஷால் கல்யாணத்துக்கு நான் போணும். அதுவரைக்கும் என் உசுரு இருக்கணும். விஜய் டிவியில் நடத்தறாங்களே 'சூப்பர் சிங்கர்', அதுக்குப் போகணும்னு என் கடைசி ஆசை. அது நிறைவேறுமா?'' என ஆவலோடு கேட்பவர்...

''என்னைப் போன்ற சிறிய கலைஞர்களை நினைச்சுப் பாருங்க. எனக்குப் பிள்ளைகள் இல்லை. என் பிள்ளைகள் எல்லாம் நடிகர்கள்தான். அவங்கதான்  உதவி செய்யணும்'' என்று உருக்கமாக முடிக்கிறார் கருப்பாயி.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!