வெளியிடப்பட்ட நேரம்: 10:03 (10/03/2018)

கடைசி தொடர்பு:16:39 (13/03/2018)

`ஒருத்தங்க கஷ்டப்பட்டா என் மனசு தாங்காது சார்!' - வேலை தேடி அலைந்த இளைஞரின் பசியாற்றிய டிராஃபிக் போலீஸ்

கோவையில், பசியில் மயங்கி விழுந்த இளைஞர் ஒருவருக்கு டிராஃபிக் போலீஸ் மகேஸ்வரன் சாப்பாடு வாங்கிக் கொடுத்துள்ளார்.

ராக்கி மகேஸ்

கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். டிப்ளமோ படித்துள்ளார். அப்பா டிரைவர். ஏழ்மையான குடும்பம். பல இடங்களில் வேலை தேடியும், தியாகராஜனுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்நிலையில், வேலை தேடி வெளியே வந்த தியாகராஜன், ரேஸ்கோர்ஸ் பகுதி அருகே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அங்குப் பணியில் இருந்த சி-2 காவல்நிலையத்தின், டிராஃபிக் போலீஸான ராக்கி மகேஸ் என்றழைக்கப்படும் மகேஸ்வரன், அந்த இளைஞரை மீட்க முயற்சி செய்துள்ளார். அவர் பசியில் இருக்கிறார் என்று அறிந்து அவருக்கு, சாப்பாடும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து டிராஃபிக் போலீஸ் மகேஸ்வரன் கூறுகையில், “கடுமையான வெயில். எப்பவும் போல ரேஸ்கோர்ஸ் பகுதி பரபரப்பா இருந்துச்சு. திடீர்னு ஒரு இளைஞர் மயங்கி விழுந்தார். தண்ணீ தெழுச்சி எழுப்பிட்டு, 108 ஆம்புலன்ஸ்க்கு போன் போட்டேன். அவர்களிடம் விவரம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அந்த இளைஞர் வேண்டாம் என்பது போல சைகை காட்டினார். இதையடுத்து, இணைப்பைத் துண்டித்து அந்த இளைஞனிடம் சென்றேன். ஆம்புலன்ஸ்லா வேண்டாம் சார்.. நான் காலைல இருந்து சாப்பிடலை. எனக்கு ப்ரஸர் இருக்கு. ஒரு சாக்லெட் மட்டும் வாங்கிக் கொடுங்கனு சொன்னார். எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதான் சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன்.

ராக்கி மகேஸ்

அதற்குள் அங்கக் கூட்டம் கூடிருச்சு.. கூட்டத்தில் அரசுக் கலைக் கல்லூரியின் மூத்த பேராசிரியர் ஒருவரும் இருந்தார். அவர், அந்த இளைஞருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகக் கூறியுள்ளார். அந்த இளைஞரின் வேலை வாய்ப்புக்காக, நானும் எனது நண்பர்களிடம் பேசியுள்ளேன். மத்தவங்க எப்படியோ, நம்ம கண்ணு முன்னாடி ஒருத்தங்க கஷ்டப்பட்டா என் மனசு தாங்காது சார்”  என்றார்

இந்த ஒரு செயல் மட்டுமல்ல, போக்குவரத்து விழிப்பு உணர்வு தொடர்பாக குறும்படங்கள் எடுப்பது, கதை எழுதுவது, மாணவர்களிடம் தன்னம்பிக்கை உரை நிகழ்த்துவது என்று மகேஸ்வரனுக்கு பல்வேறு முகங்கள் உண்டு. திருச்சியில் கர்ப்பிணி பெண்ணின் உயிரைப் பறித்த காமராஜ் இருக்கும் அதேத் துறையில்தான் மகேஸ்வரன் போன்றோரும் இருக்கின்றனர்.