வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (10/03/2018)

கடைசி தொடர்பு:12:05 (10/03/2018)

ஊர் முழுக்க கறிமணம்; திகட்டத் திகட்ட விருந்து! -  களைகட்டிய  கிடாவெட்டுத் திருவிழா 

மாசி மாதத்தில் வரும் கிடாவெட்டுத் திருவிழாவில், 13 கிராம மக்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றி, கறிவிருந்து சமைத்து உண்டார்கள்.புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் உள்ள குடுமியான்மலையில், பிடாரி அம்மன் என்கிற கிராமத்துக் கோயில் உள்ளது. இக்கோயிலில்,  உருவம்பட்டி மக்களால் மாசி மாதத்தில்  காப்புக்கட்டி, 10 நாள்கள் மண்டகப்படி பூஜை  நடத்தப்படும். திருவிழாவின் கடைசி நாளன்று கிடாவெட்டுத் திருவிழா நடக்கும். ஊரே திரண்டு, நேர்த்திக்கடனாக தாங்கள் வளர்த்த  கிடாய்களை உச்சி வெயிலில் வெட்டுவார்கள். அந்தச் சமயத்தில், ஆட்டுப் புழுக்கைகளின் வீச்சமும் கழுத்து வெட்டப்பட்ட ஆடுகளின் ஓலமும் ரத்தக் கவிச்சியும் காற்றில் கலந்து, இனம்புரியாத மெல்லிய படபடப்பையும் பயத்தையும் அங்கிருப்பவர்கள் நடுவில் உண்டுபண்ணும். சிலர், அருள் வந்து ஆடுவார்கள்.

இன்னும் சிலர், நாட்டுப்புற  'ஆங்கார ஓங்கார' பாடல்களை உச்சஸ்தாயியில் பாடுவார்கள். உச்சி வெயிலின் வெப்பம் பாறைகளில் படர்ந்து கனகனவென தகிக்கும். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு பக்தர்களும் பலி ஆடுகளும் கானல் நீரில் குளிப்பது போன்ற காட்சிப்பிழைகளைத் தோற்றுவிக்கும். வீட்டுக்கு ஒரு ஆடு என்று கிட்டதட்ட 150 ஆடுகளுக்கு மேல் பலிகொடுப்பார்கள்.

அதன்பிறகு, தலை துண்டிக்கப்பட்ட ஆட்டை தங்கள் வீடுகளுக்குக் கொண்டுசெல்வார்கள். இரவு  10 மணிக்கு மேல், வெட்டப்பட்ட ஆட்டை  சமையல் செய்து உண்பார்கள். உருவம்பட்டியில், அன்று இரவு முழுக்க கறி விருந்தின் வாசனை காற்றில் கலந்து மூக்கைத் துளைக்கும்.

இதுகுறித்து, அந்த ஊரைச் சேர்ந்த கருப்பையா பேசும்போது, "ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் நடைபெறும் கிடா வெட்டுத் திருவிழாவே நாங்கள் கொண்டாடும் ஒரே திருவிழா. மாசி மாதம் பிடாரி அம்மனுக்கு  காப்புக் கட்டிவிட்டாலே, நாங்கள் எந்தவொரு கெட்ட காரியத்துக்கும் செல்ல மாட்டோம். கெட்ட பழக்கங்களிலும் ஈடுபட மாட்டோம். பக்கத்து வீட்டில்கூட தண்ணீர் வாங்கிக் குடிக்க மாட்டோம். பயபக்தியோடு இருப்போம். கிடாவெட்டுத் திருவிழா அன்று, கரை கருப்பர், தேரடிக் கருப்பர், செவந்திக் கருப்பர், ஆண்டப்ப கருப்பர், பட்டவன் ஆகிய கிராமத்து சாமிகளை வழிபடுவோம். வெளியூரில் உள்ள அத்தனை உறவினர்களும் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் திருவிழா போல உறவுகளின் கூட்டம் இருக்கும். எங்கள் ஊரில், வீடு தவறாமல் கிடா  வெட்டுவதைப் போல, குடுமியான்மலை ஊராட்சிக்குட்பட்ட குடுமியான்மலை, உருவம்பட்டி, மரிங்கிபட்டி,நிலையபட்டி,அரியமுத்துப்பட்டி,களத்துவீடு, கீழ பாறைக்குளம், மேலபாறைக்குளம், ஒச்சபட்டி, தாத்தம்பட்டி, அண்ணாநகர், விசலூர்,எலுமிச்சபட்டி, விசலூர் ஆகிய 13 கிராமங்களில் உள்ள வீடுகளிலும்  நேர்த்திக்கடன் இட்டவர்கள், பிடாரி அம்மன் இருக்கும் திசை நோக்கி கிடா வெட்டுவது வழக்கம்" என்றார்.