தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத் திணறல்! - புதுச்சேரியில் மற்றுமொரு குழந்தை உயிரிழப்பு

தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு, புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தை இறந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி-கடலூர் சாலையில் இருக்கும் நைனார்மண்டபத்தைச் சேர்ந்தவர், பாஸ்கர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் இவருக்கும் பவானி என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சில தினங்களுக்கு முன் இந்தத் தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்தது. விழுப்புரத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்த பவானி, தனது குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது, குழந்தை மூச்சுத்திணறி மயங்கிவிழுந்து இறந்தது. தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தைக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகவே குழந்தை இறந்தது என்று தெரிவித்தனர் மருத்துவர்கள்.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே, புதுச்சேரியைச் சேர்ந்த குழந்தை ஒன்றும் அதே பாணியில் இறந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, திருக்கனூரைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ்-வித்யா தம்பதியினர். கூலித் தொழிலாளியான ராஜேஷுக்கும் வித்யாவுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. முதலில் ஆண் குழந்தை உள்ளநிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஷர்மி என்று பெயரிட்டனர். இந்நிலையில், நேற்று காலை குழந்தை ஷர்மிக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்தபோது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வித்யா, குழந்தையை உடனே மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதனைக் கேட்டதும் ராஜேஷ்-வித்யா இருவருமே கதறியழுதனர்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!