வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (10/03/2018)

கடைசி தொடர்பு:12:25 (10/03/2018)

பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்டதால் மாணவர்கள் மயக்கம்; அரசு பள்ளியில் அதிர்ச்சி

விழுப்புரம் மாவட்டத்தில், பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்டதால் மாணவர்கள் மயங்கிவிழுந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பள்ளி

Representational Image

விழுப்புரம் மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுக்குப்பத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கிவருகிறது. 5-ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில், சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். இவர்களுக்கு மதிய உணவாக, நேற்று கீரை சாதம் மற்றும் முட்டை வழங்கப்பட்டன. அப்போது ஒரு மாணவன், தனக்கு வழங்கப்பட்ட முட்டை மசாலாவில் புழு இருப்பதாக ஆசிரியரிடம் தெரிவித்தான். ஆனால், உணவில் கிடந்ததாக அந்த மாணவன் காட்டியது புழு அல்ல பல்லி என்பதால் அதிர்ச்சியடைந்தார் ஆசிரியர். உடனே, மற்ற மாணவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்தச்சொல்லி உத்தரவிட்டார்  ஆசிரியர். இதற்கிடையில், அந்த உணவை சாப்பிட்ட 9 மாணவர்களும் மயங்கிவிழுந்தனர். அதையடுத்து, அவர்கள் அருகில் உள்ள பி.எஸ்.பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம்குறித்து கேள்விப்பட்டதும், மருத்துவமனைக்குச் சென்று மாணவர்களைப் பார்வையிட்ட விழுப்புரம் மாவட்ட உதவி ஆட்சியர் சரஸ்வதி, மருத்துவர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தற்போது அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். சந்தேகத்தின் அடிப்படையில்தான் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க