வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (10/03/2018)

கடைசி தொடர்பு:13:30 (10/03/2018)

’சாமி மலையேறியது!’ - ரஜினியின் இமயமலை பயணம்குறித்து ஜெயக்குமார் விமர்சனம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி-யால், தமிழகத்தில் பொருள்கள் விலை குறைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், போகிறபோக்கில் ரஜினியின் ஆன்மிகப் பயணம்குறித்தும் விமர்சித்துள்ளார். 

ஜெயக்குமார்

ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், `மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி அமலுக்குப் பின்னர், தமிழகத்தில் அனைத்துப் பொருள்களின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, 319 பொருள்களின் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது மட்டுமல்லாமல், 75 சேவை வரிகளும் குறைக்கப்பட்டுள்ளது என்றார். 

மேலும், இனிவரும் ஜிஎஸ்டி கூட்டத்தில், நிலுவையில் உள்ள 46 கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழகம் சார்பில் வலியுறுத்தப்படும் என்றார். அப்போது, ரஜினியின் ஆன்மிகப் பயணம்குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, 'ஆன்மிக சாமியார் தற்போது மலையேறிவிட்டார்' என்று ரஜினியின் பயணத்தை கிண்டலடித்துப் பேசினார். மேலும், கல்லூரி மாணவி அஸ்வினி கொலை சம்பவம்குறித்துப் பதிலளித்த அவர், காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனைபெற்றுத் தரப்படும் என்றார்.