விவேக்கை வளர்த்துவிடும் எடப்பாடி பழனிசாமி!  - சிறை சந்திப்பில் கொந்தளித்த தினகரன் 

தினகரன்

மீண்டும் குக்கர் சின்னம் கிடைத்த உற்சாகத்தில் இருக்கிறார் டி.டி.வி.தினகரன். கட்சி, கொடி போன்ற பணிகளுக்காக தஞ்சையில் மேற்கொள்ளவிருந்த பயணத்தையும் ரத்துசெய்துவிட்டார். ' தினகரனுக்கு எதிராக விவேக்கை வளர்த்துவிடும் வேலையை ஆட்சியில் உள்ளவர்கள் செய்கின்றனர். ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில், விவேக்கின் வாக்குமூலத்தையும் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர் மன்னார்குடி உறவுகள்' என்கின்றனர், கார்டன் வட்டாரத்தில். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்திலேயே டி.டி.வி.தினகரனுக்கும் இளவரசி மகன் விவேக் ஜெயராமனுக்கும் இடையில் முட்டல் மோதல்கள் எழுந்தன. அந்தநேரத்தில், போயஸ் கார்டனில் நடந்த ரெய்டின்போது பத்திரிகையாளர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசினார் விவேக். இந்த ரெய்டின்போது, வெளிமாவட்டப் பயணத்தில் இருந்தார் தினகரன். விவேக் பேட்டிகுறித்து சசிகலாவிடம் பேசிய தினகரன், ' அந்தப் பையனுக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது. தேர்தல் செலவுக்குப் பணம் கேட்டால்கூட, ' அத்தையிடம் (சசிகலா) கேட்டுவிட்டுத் தருகிறேன்' என்கிறார். இவ்வளவு இக்கட்டுகளுக்கு மத்தியிலும் நான் வெற்றிபெற்றது தெய்வ புண்ணியம். துரைமுருகன் பேட்டியெல்லாம் ஜெயா டி.வி-யில் ஒளிபரப்பாகிறது. அரசியலை எப்படிக் கையாள வேண்டும் என்பது அந்தப் பையனுக்குத் தெரியவில்லை' எனத் தெரிவித்திருந்தார். இதை அறிந்த விவேக், தன்னுடைய உதவியாளர்கள் மூலமாக சசிகலா கவனத்துக்கு சில விஷயங்களைக் கொண்டுசென்றார். 

நேரடியான சந்திப்பிலும், தன்னுடைய நிலையை விளக்கினார் விவேக். இதை ஏற்றுக்கொள்ளாத சசிகலா, ' இவ்வளவு சிரமத்துக்கு விவேக் ஜெயராமன்இடையிலும் தினகரன் ஜெயிச்சிருக்கார். அவர் உள்பட அனைவரையும் அனுசரித்துதான் நீ செல்ல வேண்டும்' எனக் கூற, ' உங்களுக்காகத்தான் அனைத்தையும் செய்தேன். குடும்பத்தாரிடம் கெட்ட பெயரை சம்பாதிக்க நான் விரும்பவில்லை. அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக்கொள்கிறேன்' எனக் கூறிவிட்டு வந்துவிட்டார்.  அதன்பிறகு, ஜாஸ் சினிமாஸ் நிர்வாகத்தை மட்டுமே கவனித்துவந்தார். கடந்த 19-ம் தேதி, சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகு, மீண்டும் ஜெயா டி.வி அதிகாரத்துக்குள் நுழைந்தார் விவேக். " ஆனால், கடந்த இரண்டு நாள்களாக நிலைமை மாறிவிட்டது" என விவரித்த மன்னார்குடி உறவினர் ஒருவர்,

" ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை முன்வைத்து அரசியல் ஆட்டங்கள் நடந்துவருகின்றன. ' சசிகலாவுக்கு எதிராக விவேக் வாக்குமூலம் கொடுத்தால், தினகரன் உள்பட அனைவருக்குமே நெருக்கடி ஏற்படும்' எனத் திட்டமிட்டு தகவல் பரப்புகின்றனர் சிலர். ஆணைய விசாரணையில், எந்தக் கேள்விக்குமே விவேக் சரியாகப் பதில் சொல்லவில்லை. ' நான் அப்போது இல்லை'; ' ஞாபகமில்லை' என்பன போன்ற வார்த்தைகளையே தெரிவித்திருந்தார். ஆனால், வெளியில் வேறு மாதிரி தகவல் பரவுகிறது. விவேக் தரப்பை, ஆளும்கட்சியில் உள்ளவர்கள் வளைத்துவிட்டார்களோ என்ற சந்தேகம், சசிகலா தரப்பில் எழுந்துள்ளது" என்றவர், 

" போயஸ் கார்டனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, சில ஆவணங்களைக் கொண்டுசென்றனர். லேப்டாப், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை, ஐ.டி அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்தப் பொருள்களை எல்லாம் பாஸ்வேர்டு போட்டு, மூன்றாவது நிறுவனத்தின் பொறுப்பில் ஒப்படைத்துவிடுவார்கள். எந்தச் சூழ்நிலையிலும், இந்தப் பொருள்கள் வெளியாவதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் கொண்டுசென்ற பொருள்களில் சில போட்டோக்களும் அடங்கும். அதில், சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது, நிச்சயமாக வருமான வரித்துறை வட்டாரத்தில் இருந்து வெளியாக வாய்ப்பில்லை. கொடநாட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை, திவாகரனுக்கு நெருக்கமான ஒருவரிடம் காட்டிய விவேக், ' என்னுடைய அரசியல் பயணத்துக்கு இந்தப் படம் உதவும்' எனக் கூறியிருக்கிறார். தற்போதுள்ள சூழலில், தினகரனுக்கு எதிராக விவேக்கை கொம்புசீவிவிடும் வேலையை ஆளும்கட்சியில் உள்ள சிலர் செய்கின்றனர். அதற்கு விவேக்கும் உடன்படுகிறார். இதன் பின்னணியில், வர்த்தகரீதியான சில விஷயங்களும் அடக்கம். 

ஜெயானந்த்ஆளும்கட்சியின் அமைச்சர்களோடு விவேக் காட்டிவரும் நெருக்கமும், 'ஆறு பேரை அமைச்சரவையிலி  ருந்து நீக்க வேண்டும்' என தினகரன் கூறுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆர்.கே.நகர் தேர்தல் நேரத்தில், ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியான விவகாரத்தில், தினகரனுக்கு எதிராகக் கடுமையாகப் பேட்டியளித்திருந்தார் கிருஷ்ணபிரியா. அதேநேரம், ' வீடியோவை வெளியிட்டதில் எந்தத் தவறும் இல்லை' என எதிர்ப்பேட்டி அளித்தார் ஜெயானந்த்.

இதைப்பற்றி சசிகலாவிடம் பேசிய தினகரன், ' அந்தக் குடும்பமே (இளவரசி) நமக்கு எதிராக இருக்கிறது. அவர்களை யார் இயக்குகிறார்கள் என்பதும் தெரியும். அந்தப் பையன் (ஜெயானந்த்) மட்டும்தான் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார்' எனக் கூறியிருக்கிறார். அதற்கேற்ப, தினகரனுக்கு ஆதரவாக, 'போஸ் மக்கள் பணியகம்' என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார் ஜெயானந்த். 'அம்மாவின் செல்லப்பிள்ளை' என்ற அடையாளத்தோடு அரசியலில் வலம் வர விரும்புகிறார் விவேக். இதை உணர்ந்து, பணத்தைக் கையாளும் அதிகாரத்தில் இருந்து விவேக்கை விலக்கிவைக்கும் முடிவை தினகரன் எடுத்திருக்கிறார். இதற்கு சசிகலாவும் சம்மதம் தெரிவித்துவிட்டார்" என்றார் நிதானமாக. 

" ஜெயா டி.வி நிர்வாகத்தை தினகரன் மனைவி அனுராதா கையில் வைத்திருக்கிறார். ' அம்மா இருக்கும்போது, அவர்பற்றிய செய்திகளை எந்தளவுக்கு பிரதானமாக வெளியிடுவோமோ, அதே பாணியில் டி.டி.வி பற்றிய செய்திகளும் இடம்பெற வேண்டும்' என ஊழியர்களுக்குக் கண்டிப்பான குரலில் கூறிவிட்டார். ஜெயா டி.வி-யின் அதிகாரபூர்வ சி.இ.ஓ-வாக இருந்தாலும், எந்த விஷயத்திலும் விவேக் தலையிடுவதில்லை. முழுக்க, அனுராதா கட்டுப்பாட்டில்தான் ஜெயா டி.வி இயங்குகிறது. 'அதிகாரத்திலிருந்து விலக்கி வைத்துவிட்டால், இளவரசி கொந்தளித்துவிடுவார்' என்பதும் ஒரு காரணம். நேற்று, விசாரணை ஆணையத்தில் இருந்து வெளியே வந்த விவேக், ' ஆணையத்தின் விசாரணை முடிவுறும்போது, அனைத்து உண்மைகளும் தெரியவரும்' எனக் கூறிவிட்டுச் சென்றார். கார்டன் அதிகாரத்தில் இருந்து முழுமையாக விலக்கி வைக்கப்படும்போது, அரசியல்ரீதியாக சில முடிவுகளை விவேக் எடுக்கலாம். அதற்கு ஆளும்கட்சியின் ஆசியும் இருக்கலாம்" என்கின்றனர், கார்டன் வட்டாரத்தில். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!