வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (10/03/2018)

கடைசி தொடர்பு:14:00 (10/03/2018)

காலணிகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு! - ஜிஎஸ்டி கவுன்சில் செயலருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ஜி.எஸ்.டி

மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்தியபோது, நாடுமுழுவதும் பி.ஜே.பி அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, வரிவிதிப்பில் சில மாற்றங்களை மட்டும் மத்திய அரசு கொண்டுவந்தது. 

இந்நிலையில், 500 ரூபாய்க்குக் குறைவாக  விற்கப்படும்  5 சதவிகித  ஜிஎஸ்டி வரி வசூல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிய மனுவில், ஜிஎஸ்டி கவுன்சில் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை செப்பல் பஜார் சங்கத்தின் செயலாளர் லியாகத் அலி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல்செய்த மனுவில், "ஏழைகள் நடுத்தர மக்கள், வசதி உள்ளவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் காலணிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், 500 ரூபாய்க்குக் கீழ் விற்கப்படும் காலணிகளுக்கு, 5 சதவிகித ஜிஎஸ்டி வரிவசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை மக்கள் காலணி வாங்குவதற்கு அதிகப் பணம் செலுத்தவேண்டியுள்ளது. 

காலணி விற்பனையாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே, 500 ரூபாய்க்குக்  கீழ் விற்கப்படும் காலணிகளுக்கும் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி வசூல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜிஎஸ்டி கவுன்சில் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.