வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (10/03/2018)

கடைசி தொடர்பு:14:20 (10/03/2018)

காவிரி மேலாண்மை வாரியம்! - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

'காவிரி விவகாரம்குறித்து விவாதிக்க சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

'காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலத்துக்குள் அமைக்க வேண்டும்' என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், 'ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுகுறித்து விவாதிக்க, தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடாக மாநில தலைமைச் செயலாளர்கள் பங்கேற்ற கூட்டம், நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், 'காவிரி விவகாரம்குறித்து விவாதிக்க சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். தாமதப்படுத்தாமல் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டிய அவசியமும், அவசரமும் தமிழகத்துக்கு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இல்லையென மத்திய நீர்வளத்துறை செயலாளர் யூ.பி.சிங் கூறியதை தமிழகப் பிரதிநிதியாகச் சென்ற கிரிஜா வைத்தியநாதன் எதிர்த்தாரா?

பட்ஜெட் கூட்டத் தொடர் கூட்டப்படுவதற்கு முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம்குறித்து விவாதிக்க சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.