`ஏர்செல் நிறுவன ஒழிப்பில் கார்ப்பரேட்டுகளின் தலையீடு!’ - விக்கிரமராஜா குற்றச்சாட்டு

”ஏர்செல் நிறுவனம் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. ஏர்செல் நிறுவனத்தை ஒழித்து ஓரம்கட்டிட  கார்பரேட் நிறுவனங்களின்  தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறோம்” என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரரமைப்பின்  மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

விக்கிரமராஜா

 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், வரும் மே 5-ம் தேதி,சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில மாநாடுகுறித்த நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதன் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டார். பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. ஆனால், அவ்வாறு அனுமதிக்க முற்பட்டால்,  வணிகர்களைத் திரட்டிப் போராடுவோம். சிங்கிள் பிராண்ட் வர்த்தகத்தில் 100 சதவிகித அந்நிய நேரடி  முதலீட்டு விஷயத்தில் நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம்.  ஏற்கெனவே, ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறு வணிகர்களின் நிலை கேள்விக்குறியான நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பால்  வணிகர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

ஏர்செல் நிறுவனம் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. ஏர்செல் நிறுவனத்தை ஒழித்து ஓரம் கட்டிட  கார்ப்பரேட் நிறுவனங்களின்  தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறோம்.  சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலிட்டைக் கொண்டு வர, வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்து மாநிலங்களிலும் வெளியில் தெரியாமல் அமைதியாக ஆய்வுசெய்துகொண்டிருக்கிறார்கள்.  

திருச்சியில், போக்குவரத்துக் காவல் ஆய்வாளரின் செயலால் கர்ப்பிணிப்  பெண் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் மிகுந்த வருத்தமடையச் செய்துள்ளது. பொதுமக்களைக் காப்பாற்றவேண்டிய காவல்துறையினரே இவ்வாறு விபரீத வேலைகளில் ஈடுபடலாமா?  தற்போது வாகனச் சோதனையில் ஹெல்மெட் போடாதவர்களைப் பிடித்து அபராதம் விதிப்பதில்  மட்டுமே கூடுதல் கவனம் செலுத்திவருகின்றனர். திருட்டு, கொள்ளை, கொலை வரை பல குற்றச்செயல்கள் அதிகரித்துவருகின்றன. எனவே, திருடர்களை மடக்கிப் பிடிப்பதிலும், திருடு போன பொருள்களை மீட்பதிலும் காவல்துறையினர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

வீட்டுவரி விகிதம் முறைப்படுத்தப்பட்டு கணக்கீடுசெய்யப்படமால், 10 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அதற்கான சட்ட விதிமுறைகள் என்ன என்பது அதிகாரிகளுக்கும் தெரியவில்லை, மக்களுக்கும் தெரியவில்லை. இதை முறைப்படுத்த, வரும் 12-ம் தேதி அமைச்சர்களைச் சந்திக்க இருக்கிறோம். அதன் பிறகும் நடவடிக்கை இல்லை என்றால், நீதிமன்றத்தை நாட உள்ளோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!