வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (10/03/2018)

கடைசி தொடர்பு:17:30 (10/03/2018)

மதுரையில் தண்ணீர் பஞ்சம் வராது! உறுதியாக சொல்லும் செல்லூர் ராஜூ

மதுரை காளவாசல் பகுதியில், மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது.

செல்லூர் ராஜூ

பல்வேறு துறையைச் சார்ந்த பெண்களும் கல்லூரி மாணவிகளும் இதில் கலந்துகொண்டனர். பேரணியாக நடைபெற்ற இந்த விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு பச்சைக்கொடி அசைத்துத் தொடங்கிவைத்தார். இந்த விழாவில், மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த 500-க்கும்  மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு, சுமார் 1கிலோமிட்டர் தூரம் பேரணியாகச் சென்றனர்.

இந்தப் பேரணியில், சுற்றுச்சூழல் நலன் காக்க வேண்டும், மரம் வளர்க்க வேண்டும் என விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டது. விளம்பரப் பதாகைகளைக் கையில் ஏந்தி, பெண்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது பேசிய செல்லூர் ராஜு, "மதுரையில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும்,  துணை முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டால் அப்படி ஒரு நிலை ஏற்படாது .

கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம்  நீர்நிலைகளில் தண்ணீர் உள்ளது. வரும் காலங்களில், பருவநிலையால் தண்ணீர் தட்டுப்பாடு வராது என்று கூறினார்,
மேலும், அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.