வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (10/03/2018)

கடைசி தொடர்பு:16:35 (10/03/2018)

72 கி.மீ தூரம்... 20,000 தன்னார்வலர்கள்! - தாமிரபரணி ஆற்றில் 3-ம் கட்ட தூய்மைப் பணி

நெல்லையில், தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி மூன்றாம் கட்டமாக நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 20,000 பேர் கலந்துகொண்டனர். 

தாமிரபரணி சுத்தப்படுத்தல்

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீருக்கும் விவசாயத் தேவைக்கும் பயன்படும் தாமிரபரணி ஆறு, தமிழக எல்லையிலேயே தொடங்கி தமிழக எல்லையிலேயே கடலில் கலக்கிறது. அதனால், தண்ணீர் சிக்கல் ஏதுமற்றதாக விளங்கும் இந்த ஆறு, குப்பைகளாலும், கழிவுகளாலும் மாசடைந்துவருகிறது. அதனால் தாமிரபரணி ஆற்றின் சுத்தத்தைப் பராமரிக்கும் வகையிலும், ஆற்றை பாதுகாப்பதன் அவசியத்தை இளைஞர்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும், நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. 

காவல்துறையினர், அரசு ஊழியர்கள், தன்னார்வ அமைப்பினர், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரைக்கொண்டு இந்தப் பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில், மூன்றாம் கட்டமாக தாமிரபரணி ஆற்றை சுத்தம்செய்யும் பணிகள் நேற்றும் இன்றும் நடைபெற்றுவருகின்றன. நேற்று, ஜே.சி.பி எந்திரங்கள் மூலமாக சீமைக்கருவேல மரங்கள், புதர்களை அகற்றும் பணிகள் நடைபெற்றன. 

 இன்று (மார்ச் 10-ம் தேதி) பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 20,000 பேரைக்கொண்டு தாமிரபரணி ஆற்றை சுத்தம்செய்யும் பணிகள் நடைபெற்றன.

சுத்தப்படுத்தப்படும் நதி

தாமிரபரணி ஆறு, மொத்தம் 128 கி.மீ தூரம் ஓடுகிறது. இந்த ஆறு தொடங்கும் பாபநாசம் பகுதியில் இருந்து நெல்லை மாவட்ட எல்லையான சீவலப்பேரி வரையிலான 72 கி.மீ தூரத்துக்கு தூய்மைப் படுத்தும் பணிகள் நடக்கின்றன. பொதுமக்களும் இந்தப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றுவருகின்றனர். இதுகுறித்து நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ’’தாமிரபரணியின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் விளக்கும் வகையில் இந்தப் பணிகள் நடக்கின்றன. ஏற்கெனவே இரு கட்டப்பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று மூன்றாம் கட்டப் பணிகள் நடக்கின்றன.

இந்த ஆற்றை சுத்தம் செய்வதுடன், ஆற்றில் பூங்கா அமைக்கும் பணிகளையும் மேற்கொள்ள உள்ளோம். அதன்மூலம் பொதுமக்களுக்கு ஆற்றை சுத்தமாக வைத்திருக்கவேண்டியதன் அவசியம் புரியும். அதன் மூலமாக பொதுமக்களே ஆற்றை பராமரித்துப் பாதுகாப்பார்கள். அதற்கான விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நிகழ்சியாகவே இந்தப் பணிகளை மேற்கொண்டுவருகிறோம்’’ என்றார் உற்சாகமாக.