வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (10/03/2018)

கடைசி தொடர்பு:17:10 (10/03/2018)

”ஹெச்.ராஜா அவர்களே! ஆதி திராவிடர் வரலாறு தெரியுமா உங்களுக்கு...” - செ.கு.தமிழரசன்

செ.கு.தமிழரசன்

ஹெச்.ராஜா, என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது! 'பெரியார் சிலையை உடைக்கவேண்டும்' என்ற அவரது ட்வீட் சர்ச்சையே இன்னமும் முடியாத நிலையில், அடுத்த சர்ச்சையை அரங்கேற்றிவிட்டார். பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், ''திராவிடர்' என்ற சொல்லாடலே, தமிழ் அடையாளத்தை அழிக்க வந்த வார்த்தைதான். ஆந்திராவில், 'ஆதி தெலுங்கர்'கள் இருக்கும்போது, தமிழ்நாட்டில் 'ஆதி தமிழர்' என்றுதானே பெயர் இருக்க வேண்டும். ஏன் ஆதி திராவிடர்கள் என்று வைத்திருக்கிறார்கள்? திராவிடம் என்ற பெயரில், தமிழையும் தமிழர்களையும் அவர்களது பண்பாட்டையும் அழிக்க நினைக்கிறார்கள்'' என்று பேசி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார். 

'ஆதி திராவிடர்' வார்த்தைப் பிரயோகம் குறித்து ஹெச்.ராஜா எழுப்பியிருக்கும் ஆட்சேபங்களை மறுத்துப் பேசும், இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் ''தமிழ், தமிழர் வரலாறு தெரியாமல் ஹெச்.ராஜா ஏதேதோ பிதற்றுகிறார். தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் ஆதரவாக அவர் பேசிவருவது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாகத்தான் இருக்கிறது. தமிழர் வரலாற்றின் அடிப்படையேத் தெரியாமல் உளறுகிறார் ஹெச்.ராஜா!'' என்றவர், 'ஆதி திராவிடர்' வார்த்தை உருவான வரலாறு குறித்துத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

'' 'ஆதி திராவிடர்' என்ற பெயர் 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலகட்டத்திலேயே பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதே நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில், அதாவது 1891 ஆம் ஆண்டில் சமூகப் பணியைத் தொடங்கிய பண்டிதமணி அயோத்திதாசர், 'தமிழன்' பத்திரிகையில், 'திராவிட' சொல்லாக்கத்தைப் பயன்படுத்துகிறார். அதாவது, 'பிராமணரல்லாதோர் இயக்கம்' உருவாகிறது. அப்போது இந்த இயக்கத்தின் பெயர் குறித்துக் கேள்வி எழுப்பிய அயோத்திதாசப் பண்டிதர், ''பெயரில்கூட நமக்கென்று தனித்த அடையாளம் இல்லையா? 'பிராமணர் - பிராமணரல்லாதோர்' என்று அந்த சொல்லாடலை வைத்துத்தான் நம்மையும் நாம் அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டுமா? நமக்கென்று ஒரு சுயம் இல்லையா?'' என்றார். அதன் தொடர்ச்சியாக, 'திராவிடர்' என்ற சொல்லாக்கத்துக்கும் முதன்முதலில் அடித்தளமிடுகிறார் அயோத்திதாசப் பண்டிதர்.

ரெட்டமலை சீனிவாசன்

திராவிடம் என்பது தமிழ்மொழிதான். மங்கோலியர், சுமேரியர், திராவிடர், ஆரியர் என இனத்தைக் குறிக்கும் சொல்லாகவும் இது இருக்கிறது. அதாவது அன்றையக் காலக்கட்டத்தில், இந்தியாவின் பூர்வீகக் குடிகளைக் குறிக்கும் சொல்லாகவும் 'திராவிடர்' என்ற சொல் இருக்கிறது. 1920 ஆம் ஆண்டில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூகப் பணிகளை மேற்கொண்டுவந்த ஜான் டி.ரத்தினம் என்ற தலித் பாதிரியார், 'திராவிடர் கழகம்' என்ற அமைப்பைத் தொடங்குகிறார்.  அப்போதுதான், திராவிடர்களிலேயே பூர்வீகமாக இருந்துவரக்கூடிய மக்களை பொதுவாக அடையாளப்படுத்தும் சொல்லாக 'ஆதி திராவிடர்' என்ற சொல்லைக் கொண்டுவந்தார்கள். அவர் கொண்டுவந்ததுதான் 'திராவிடப் பாண்டியன்' பத்திரிகையும்கூட. அதுவரையிலும் ஆதி திராவிடர்களை, 'சண்டாளர், நாதாரி, பஞ்சமன்' என்று மிகவும் கீழ்த்தரமாக சாதியின் பெயரால் இழிவுபடுத்தி அழைத்துவந்தனர். ஆதி திராவிடர் என்ற சொல் பயன்படுத்தப்பட்ட பிறகுதான் இந்த இழிநிலை நீங்கியது. இந்தச் சமூக மக்கள்தான் 'நீதிக்கட்சி'யின் பொதுச்செயலாளராக இருந்துவந்த ரெட்டமலை சீனிவாசனுக்குத்  'திராவிட மணி' என்ற பட்டத்தையும் கொடுக்கிறார்கள். 

பிற்காலத்தில், 'நீதிக் கட்சி' ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு, ஆதி திராவிட மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு 'பூர்வீகக் குடி'களை இனி 'ஆதி திராவிடர்' என்று அழைக்கும் முறையைக் கொண்டுவந்தார்கள். அதன்பிறகு 1932 ஆம் ஆண்டில் 'சைமன் கமிஷன்' வந்தபிறகு, இந்தப் பெயர் சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இந்த வரலாறு எல்லாம் தெரியாமல், 'ஆந்திராவில் ஏன் இந்தப் பெயரை ஒப்புக்கொள்ளவில்லை? மலையாளத்தில் ஏன் ஒப்புக்கொள்ளவில்லை?' என்றெல்லாம் திரித்துக் கூறுவது ஏமாற்றுவேலை. மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டபிறகு ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், 'ஆதி ஆந்திரா'கள் ஆனார்கள். கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள், 'ஆதி கர்நாடகா' ஆனார்கள். கேரளாவைப் பொறுத்தவரை, அது ஈழ நாடு; அங்கே இருந்தவர்கள் ஈழவர்கள். ஆனால் அப்போதும்கூட நாம் 'சென்னை மாகாணமாக'த்தானே இருந்தோம். அதன்பிறகு 1960-ஆம் ஆண்டுவாக்கில்தானே 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

ஹெச்.ராஜா

'தமிழ்' என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது என்பதற்கான வேர்ச்சொற்கள் குறித்தெல்லாம் பாவாணர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். மண் சார்ந்த இனமாகத் திகழ்ந்தது இந்தச் சமூகம். இப்படி தமிழகத்தின் வரலாறு குறித்தெல்லாம் ஹெச்.ராஜாவுக்கு எதுவும் தெரியாது. வடநாட்டுப் பூர்வீகம் வேண்டுமானால் அவருக்குத் தெரிந்திருக்கலாம். அவரைப் பின்னிருந்து இயக்குபவர்கள் யாரென்று தெரியவில்லை. காலம்காலமாகப் பிற்படுத்தப்பட்ட மக்களையும் ஒடுக்கப்பட்ட அடித்தளத்து மக்களையும் பிரித்தாளுகிற சூழ்ச்சியாகத்தான் ஹெச்.ராஜாவின் கூற்றையும் பார்க்கவேண்டியிருக்கிறது.

இப்போது இவர்கள் கேட்கும் இந்தக் கேள்வி குறித்து சென்னை மாகாண சபையிலேயே கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அப்போது அந்த விவாதத்தில் பங்கேற்று பதில் அளித்துப் பேசிய எம்.சி.ராஜா, ''இது பொது அடையாளத்துக்காக வைக்கப்பட்ட பெயர். இதனை மாற்றுவதென்றால், 'ஆதி தமிழன்' என்றா வைக்க வேண்டும்? அப்படி மாற்றினால், மற்றவர்களெல்லாம் 'பாதி தமிழரா?' என்ற கேள்வி எழாதா? எனவே  'ஆதி திராவிடர்' என்ற பெயரிலேயே தொடர்வதுதான் சரியானது'' என்று கூறியிருக்கிறார். பண்டிதமணி அயோத்திதாசர் 'பூர்வீகத் திராவிடர்' என்று பயன்படுத்திய வார்த்தையை இப்போது நாம் 'ஆதி திராவிடர்' என்ற வார்த்தையாகப் பயன்படுத்துவதென்பது முற்றிலும் சரியே!'' என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி முடிக்கிறார் செ.கு.தமிழரசன்!


டிரெண்டிங் @ விகடன்