வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (10/03/2018)

கடைசி தொடர்பு:18:30 (10/03/2018)

'அலங்காரங்களுடன் காத்துக் கொண்டிருந்த மாணவர்கள்!' - அமைச்சர் தாமதத்தால் ஒத்திவைக்கப்பட்ட பள்ளி ஆண்டு விழா

இருசக்கர வாகனம் வழங்கும் விழாவில் உரிய நேரத்தில் அமைச்சர் பங்கேற்காத்தால், தனியார் பள்ளியின் ஆண்டு விழா நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, உழைக்கும் மகளிருக்கு 50 சதவிகித மானிய விலையில் வழங்கப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கான சாவி மற்றும் மானியத்திற்கான உறுதிமொழிப் பத்திரங்கள் வழங்கும் விழா, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில்  நீலகிரி மாவட்டம், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 
காலை 11:00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே கட்டடத்தில், எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா மதியம் 1:00 மணிக்கு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

இருசக்கர வாகனங்கள் பெற வந்த பயனாளிகள், காலை 8:00 மணி முதலே பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்தில் ஆங்காங்கே காத்துக்கொண்டிருக்க, மதியம் 1:00 மணிக்கு நடைபெற இருந்த தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கேற்க 200-க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் குழந்தைகள் 11:00 மணி முதலே வளாகத்திற்கு வந்தவண்ணமிருந்தனர். ஆனால் அமைச்சர் வேலுமணி, மதியம் 1:00 மணி வரை விழாவுக்கு வரவில்லை. இதனால், தனியார் பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்ச்சி  நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

 

அப்போது, விழாவில் பங்கேற்க கலெக்டர் இன்னொசென்ட் திவ்யா வந்தார், அவரிடம் பெற்றோர் முறையிட, இதுகுறித்து தனக்கு தெரியாது என்றபடி அங்கிருந்து கிளம்பினார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அ.தி.மு.க-வினர், அமைச்சர் மதியம் 2:00 மணிக்குதான் வரவுள்ளார், விழா அப்போதுதான் துவங்கும் என்றனர்.

இந்நிலையில், வளாகத்தில் காத்திருந்த பெற்றோர் மற்றும் குழந்தைகள் மத்தியில் பள்ளி ஆண்டு விழா நடைபெறுமா என்ற குழப்பம் ஏற்பட்டது.  அப்போது சம்பவ இடத்திற்கு பள்ளியின் முதல்வர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசு விழா எப்போது நிறைவடையும் என்பது சரியாகத் தெரியவில்லை. எனவே, பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நாளைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக  அறிவித்தார். அங்கிருந்த பெற்றோர், பள்ளி முதல்வரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வெகுதூரத்திலிருந்து கலை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள குழந்தைகளுக்கு மேக்கப் எல்லாம் போட்டு அழைத்துவந்துள்ளோம். திடீரென நிகழ்ச்சி  நாளைக்கு என்று அறிவித்தால் எப்படி என கடிந்துகொண்டனர். மேலும், அமைச்சரே இப்படி இருந்தால் அரசு நிர்வாகம் எப்படி இருக்கும் என்று மனம் நொந்தபடி அங்கிருந்து கிளம்பினர். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க