வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (10/03/2018)

கடைசி தொடர்பு:20:00 (10/03/2018)

ரவுடிகள் கட்டுப்படுத்தப்பட்டதால் குறையும் குற்றச்செயல்கள்! - நெல்லை சரக டி.ஐ.ஜி நம்பிக்கை

நெல்லை சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரவுடிகள் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதால், குற்றச்செயல்கள் குறைந்துவிட்டதாக, டி.ஐ.ஜி கபில்குமார் சாரட்கர் தெரிவித்துள்ளார். ரவுடிகள் பட்டியல் எடுக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார். 

ரவுடிகள் கணக்கெடுப்பு குறித்து டி.ஐ.ஜி

தமிழகத்தில், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில், பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரக்கூடிய ரவுடிகளைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள ரவுடிகள் பட்டியல் எடுக்கப்பட்டுவருகிறது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை சரக டி.ஐ.ஜி-யான கபில்குமார் சாரட்கர், ``நெல்லை சரகத்துக்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ரவுடிகள் குறித்த பட்டியல் எடுக்கப்பட்டுவருகிறது. சிறிய அளவிலான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகளை தொடக்கத்திலேயே கண்காணித்து, தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறோம். அதன்மூலமாக, புதிய ரவுடிகள் உருவாவது தடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ரவுடிகள் தொல்லை இருப்பதால், அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரவுடிகளின் தொல்லைகளிலிருந்து பொதுமக்களைக் காக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை சரகத்துக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2016-ம் ஆண்டு 170 கொலைச் சம்பவங்கள் நடந்தன. ஆனால் 2017-ம் ஆண்டு, அது 159 கொலைகளாகக் குறைந்துள்ளது. நெல்லை மாநகரத்தில், 2016-ம் ஆண்டு 103 கொலைகளும், அடுத்த ஆண்டு 86 கொலைகளும் நடந்துள்ளன’’ எனத் தெரிவித்தார்.