88 கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் முறைகேடாக விற்பனை! - தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக்குழு பகீர்

தஞ்சைப் பெரியகோயில் உள்ளிட்ட 88 கோயில்களுக்கு மராட்டிய வம்சத்தைச் சேர்ந்த பாபாஜி ராஜா பான்ஸ்லே என்பவர் பரம்பரை அறங்காவலராக இருந்துவருகிறார். இந்நிலையில், இக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், முறைகேடாக விற்பனைசெய்யப்பட்டு வருவதாக, தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

தஞ்சை பெரியக்கோவில்

இக்குழுவின் முக்கிய நிர்வாகியான பழ.ராஜேந்திரன், ``ஒரு தனிநபர் 88 கோயில்களுக்கு பரம்பரை அறங்காவலராக இருப்பதென்பது, ஜனநாயகத்துக்கு முரணானது. பெரியகோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், காளியம்மன் கோயில், எல்லையம்மன் கோயில், கோடியம்மன் கோயில் உள்ளிட்ட மிகவும் பிரபலமான கோயில்கள் உள்பட 88 கோயில்கள், பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லேவின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இவற்றில் பெரும்பாலான கோயில்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சொந்தமாக உள்ளது. கோயில்களின் அன்றாட பூஜைகளுக்காகவும் பராமரிப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சிக்காகவும்தான் பலர் இந்த நிலங்களைக் கொடையாக வழங்கியுள்ளார்கள். இவைகளை விற்பனைசெய்வது சட்டவிரோதமானது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை போன்ஸ்லே குடும்பத்தினர் முறைகேடான வகையில் விற்பனைசெய்துள்ளார்கள். இக்கோயில்களுக்கு முன் உள்ள இடங்களில், பெரிய அளவிலான கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டு, கொள்ளை லாபம் பார்த்துவருகிறார்கள். முறைகேடுகளைத் தடுக்கவும், இக்கோயில்களின் வருமானம் தமிழக அரசுக்கு கிடைப்பதற்கும், இந்து சமய அறநிலையத்துறை இக்கோயில்களைத் தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். பரம்பரை அரங்காவல்ர் என்ற பொறுப்பு நீக்கப்பட வேண்டும். நிலங்கள் விற்பனைகுறித்து சட்டரீதியான விசாரணைசெய்யப்பட வேண்டும்” என வலியுறுத்துகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!