வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (10/03/2018)

கடைசி தொடர்பு:21:00 (10/03/2018)

கமல்ஹாசன் கட்சியின் பெயருக்கு சிக்கல்! - தேர்தல் ஆணையத்துக்கு நெல்லை வழக்கறிஞர் மனு

நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள கட்சியின் பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் மனு அனுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கமல்ஹாசன் கட்சிக்கு எதிர்ப்பு

நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்கிற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். மாவட்டந்தோறும் நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டுவருகிறார். அத்துடன், அவரது கட்சியின் பெயரான ’மக்கள் நீதி மய்யம்’ என்கிற பெயரை விரைவில் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவுசெய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்.

இந்த நிலையில், அவரது கட்சிப் பெயரை தலைமைத் தேர்தல் ஆணையம் பதிவுசெய்யக் கூடாது என நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞரான வலம்புரி மோசே தெரிவித்துள்ளார். டி.வி.வி.தினகரன் அணியைச் சேர்ந்தவரான வழக்கறிஞர் வலம்புரி மோசே, இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள மனுவில், ’’நடிகராய் இருந்து அரசியல்வாதி ஆகியுள்ள கமல்ஹாசன், தாம் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சிக்கு ‘மக்கள் நீதி மய்யம்’ எனப் பெயர் பதிவுசெய்யக்கோரி மனுச் செய்துள்ளதாக அறிகிறேன். இது தொடர்பாக, கமல்ஹாசன் தரப்பில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான குறைபாட்டைத் தங்களின் கனிவான பரிசீலனைக்குக் கொண்டுவர வேண்டியது எனது நியாயமான கடமை எனக் கருதுகிறேன். 

இந்திய நீதிபரிபாலன முறையின் ஓர் அங்கமான ’லோக் அதாலத்’ என்னும் சட்டபூர்வமான அமைப்பு மாற்றுமுறை தீர்வுக்கான ஏற்பாடாக இருந்துவருகிறது. லோக் அதாலத் என்பது தமிழில் மிக நேர்த்தியாக ’மக்கள் நீதி மன்றம்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மக்கள் நீதிமன்றம் பற்றிய விக்கிபீடியா பக்கத்தை இத்துடன் இணைத்துள்ளேன். அதன் வழியாக மக்கள் நீதிமன்றத்தின் செயல்பாட்டை அறிய இயலும். 

கமல்ஹாசன் பதிவு செய்யக் கோரியுள்ள மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரானது, மக்கள் நீதி மன்றம் என்பதை ஒத்து இருப்பதுடன், அப்படி ஒரு அமைப்பு அனைத்து, நீதிமன்ற வளாகங்களில் செயல்பட்டும்வருகிறது. நீதிபரிபாலன முறையின் அமைப்பினைப்போன்ற ஒரு பெயரை, புதிதாகத் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்குத் தருவது பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற வீண் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். 

எனவே, எனது ஆட்சேபனையைப் பரிசீலனைசெய்து, கமல்ஹாசன் தரப்பில் மக்கள் நீதி மய்யம் எனப் பெயர் பதிவு செய்யக் கோரி தரப்பட்டுள்ள மனுவை தள்ளுபடிசெய்திட வேண்டும்’’ என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனது எதிர்ப்பையும் மீறி, கட்சிப் பெயருக்கு அனுமதி அளித்தால், உயர்நீதி மன்றத்தை நாடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.