வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (10/03/2018)

கடைசி தொடர்பு:21:30 (10/03/2018)

கோயில் வளாகத்தில் நோட்டீஸ் விநியோகித்த விவசாயிகள்மீது நடவடிக்கை! - போலீஸிடம் திருக்கோயில் நிர்வாகம் புகார் மனு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் நோட்டீஸ் விநியோகம்செய்து, பக்தர்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவித்த விவசாய சங்கத்தினர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருக்கோயில் அறநிலையத்துறை ஆய்வாளர் முருகானந்தம், போலீஸில் புகார் அளித்துள்ளார். 


தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள், கன்னியாகுமரியில் தொடங்கி கடந்த சில நாள்களாக பல ஊர்களில் விழிப்பு உணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுவருகின்றனர். 2 நாள்களுக்கு முன்பு, திருச்செந்தூருக்கு வந்த அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள், கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபின், சண்முக விலாச மண்டபம் மற்றும் கோயில் வாசல் பகுதிகளில் இருந்த பக்தர்களுக்கு விழிப்பு உணர்வு பிரசார நோட்டீஸை வழங்கினர். அப்போது, அங்கு வந்த பா.ஜ.க பெண் நிர்வாகி நெல்லையம்மாளுக்கும் அய்யாக்கண்ணுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் நெல்லையம்மாள், அய்யாக்கண்ணு கன்னத்தில் பளார் என அறைந்து, செருப்பை எடுத்துக் காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அய்யாக்கண்ணு தன்னை தாக்கியதாகக் கூறி, நெல்லையம்மாள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். 

 


இந்நிலையில், திருக்கோயில் அறநிலையத்துறை ஆய்வாளர் முருகானந்தம், கோயில் வளாகத்தில் நோட்டீஸ் விநியோகம் செய்த விவசாயிகள் சங்கத்தினர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருக்கோயில் காவல்நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில், “திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில், கடந்த 8-ம் தேதி மாலை 3 மணி அளவில், விவசாய சங்கத்தினர் சிலர், சண்முகவிலாச மண்டபத்திற்கு அருகில், பக்தர்களிடம் நோட்டீஸ் விநியோகம் செய்தனர். அப்போது, பணியில் இருந்த திருக்கோயில் பாதுகாவலர்கள், அதைத் தடுக்க முயன்றனர். ஆனால் அதையும் மீறி, விவசாயிகள் நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளனர். அப்போது, பா.ஜ.க பெண் நிர்வாகி ஒருவருக்கும் விவசாயிகளுக்கும் இடையே  ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.

சுவாமி தரிசனத்திற்காக, உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் வருகைதருகின்றனர். தரிசனம்செய்யும் இடத்தில் இவ்வாறு நோட்டீஸ் விநியோகித்து பக்தர்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட விவசாய சங்கத்தினர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து, இதுபோன்ற நிகழ்வுகள் கோயில் வளாகத்திற்குள் நடக்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.    


  
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க