`உங்கள் போராட்டத்துக்கு என்றைக்கும் என் ஆதரவு உண்டு!’ - அத்திக்கடவு போராட்டக் குழுவை உற்சாகப்படுத்திய கமல்

ஈரோடு மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை நடைபெறும் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். அதற்காக, இன்று மதியம் கோவை விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு, திருப்பூர் மாவட்டம் அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகே கட்சித் தொண்டர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கமல்
 

பின்னர், திறந்தவெளி வாகனத்தில் நின்றுகொண்டு, அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்களின் மத்தியில் உரையாற்றினார். அப்போது,  ''எந்த தைரியத்தில் நீ அரசியலுக்கு வந்தாய் என்று பலரும் கேட்கிறார்கள். இப்போது இங்கு கூடியிருக்கும் இந்த கூட்டம் கொடுத்திருக்கும் தைரியத்தில்தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். இந்த பலத்தை மட்டுமே நம்பி நான் அரசியலுக்கு வந்துள்ளேன். இந்தக் கூட்டத்தின் தலைவனாக நான் முன்னோக்கி நடக்க, நீங்கள் அனைவரும் என்னை பின்தொடருங்கள் என்று கூறமாட்டேன். நம்முடைய இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து நடப்போம் என்றே கூறுகிறேன். நல்லதொரு தமிழ்நாட்டை உருவாக்க, நாம் இறங்கி வேலைசெய்யவேண்டிய தருணத்தில் இருக்கிறோம். அவ்வாறு நாம் அனைவரும் இறங்கி வேலைசெய்தால், நாளை நமதாகும்'' என்றார்.

கமல்

அதன்பிறகு, அவினாசி - அத்திக்கடவு திட்ட போராட்டக் குழுவினரோடு இணைந்து மதிய உணவை முடித்துக்கொண்டவர், போராட்டக் குழுவினரிடம், " 3 தலைமுறைகளாக தண்ணீருக்காகப் போராடிவருகிறீர்கள். உங்களுடைய அத்திக்கடவு போராட்டத்துக்கு என்றைக்கும் என் ஆதரவு உண்டு'' என்று ஊக்கம் கொடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, 1970-களில் மின் கட்டணத்தை எதிர்த்துப் போராடி, பெருமாநல்லூர் அருகே துப்பாக்கிச் சூட்டில் பலியான 3 விவசாயிகளின் நினைவாக  வைக்கப்பட்டிருக்கும் நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து மரியாதைசெய்துவிட்டு, ஈரோடு நோக்கி புறப்பட்டார் கமல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!