வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (10/03/2018)

கடைசி தொடர்பு:22:30 (10/03/2018)

'கேட்கும் நிழற்கூடையை திறப்பதில்லை; கேட்காமலேயே டாஸ்மாக்கை திறக்கிறார்கள்'- போராட்டத்தில் மக்கள் வேதனை

பேருந்து நிழற்குடை அமைக்க வலியுறுத்தி பல்வேறு பேராட்டங்களை நடத்திவிட்டோம் இந்த அதிகாரிகளின் காதில் விழுந்த பாடில்லை. ஆனால் டாஸ்மார்க் கடையை மட்டும் கேட்காமலேயே திறக்கிறார்கள் என்று குடையை பிடித்தப்படி  பொதுமக்கள் நூதன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் ஊராட்சி திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் இணைக்கும் வகையில் பெரம்பலூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. திருமானூர் அருகில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பேருந்து பயணத்திற்காக திருமானூருக்கே வந்து செல்கின்றனர். மேலும் இக்கிராமத்தை சுற்றி ஏலாக்குறிச்சி வீரமாமுனிவர் எழுப்பிய அடைக்கல மாதா கோயில், கரைவெட்டி பறவைகள் சரணாலயம், திருமழபாடி வைத்தியநாத சுவாமி ஆலயம் என பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன.

பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் திருமானூர் பேருந்து நிலையத்திற்கு வந்தே மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இங்கு அமைக்கப்பட்டிருந்த பேருந்து நிலையம் 2ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டது. இதனையடுத்து இதுவரை பேருந்து பயணிகளுக்காக பேருந்து நிழற்குடை அமைக்கப்பட வில்லை. இதனால் பேருந்திற்காக வரும் பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கர்ப்பிணிப் பெண்கள், வயதானோர் நிற்கவோ, அமரவோ வசதி இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பேருந்த பயணிகள் பயன்பெறும் வகையில் பேருந்து நிழற்குடை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் ஆர்பாட்டம் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசினோம்.  ``பேருந்து நிழற்குடை அமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட பேராட்டங்களை நடத்திவிட்டோம். இந்த அதிகாரிகளின் காதில் விழுந்த பாடில்லை. ஆனால் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று சொல்லும் போது கேட்காமலேயே திறக்கிறார்கள். இதுதான் அதிகாரிகள் மக்களுக்கு செய்யும் நீதியா?’’ என்றனர். அதிகாரிகளை எதிர்த்து கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் கையில் குடையை பிடித்தப்படி பலரும் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில் பேருந்து பயணிகள் பயன்பெறும் வகையில் உடனடியாக பேருந்து நிழற்குடை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.