வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (10/03/2018)

கடைசி தொடர்பு:16:13 (09/07/2018)

``நான் வேற கல்யாணம் பண்ணிக்கட்டுமா?" - கணவன் கேள்வியால் தூக்கில் தொங்கிய மனைவி

"நிர்மலா, எனக்கு குழந்தை வேணும். உனக்கு குழந்தைப் பெற்றுத் தர முடியாது. அதனால, நான் வேற கல்யாணம் பண்ணிக்கட்டுமா?" என்று தன் கணவன் கேட்டதால், மனமுடைந்த மனைவி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தப் பரபரப்பு சம்பவம் ஆலங்குடி அருகில் நடந்துள்ளது.


நடேசன் - நிர்மலா தம்பதியினர்

புதுக்கோட்டை  மாவட்டம் ஆலங்குடி அருகிலுள்ள உள்ளது கூழையன்காடு என்ற கிராமம். இங்கு வசிப்பவர்கள்  நடேசன், நிர்மலா தம்பதி. நடேசன் அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2006.-ம்வருடம் திருமணம் நடந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக இவர்களுக்குக் குழந்தை இல்லை. அதற்கான சிகிச்சைகளை இருவரும் எடுத்திருக்கிறார்கள். ஆனால்,எந்தப் பலனும் கிடைக்கவில்லை. நாளடைவில் குழந்தையின்மைக்குக் காரணம் நீதான் என்று கணவனும் மனைவியுமாக ஒருவரை ஒருவர் குறைகூறி சண்டையிட ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த சிறிய சண்டைகள் வளர்ந்து பெரிதாயிருக்கிறது. குழந்தையின்மையைக் காரணமாக வைத்து இருவரும் சண்டையிட்டுக் கொண்டாலும் மற்றபடி ஒற்றுமையாக ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இதனைக் காரணமாக வைத்து மனைவியைக் கொடுமைப்படுத்துவதோ அல்லது அவரை தாய் வீட்டுக்கு அனுப்பும் காரியங்களிலோ நடேசன் செய்யவில்லை என்கிறார்கள் அந்தத் தெருவில் வசிப்பவர்கள்.

இப்படியே  11 வருடங்கள் கடந்த நிலையில், சமீபகாலமாக நடேசன் வேறு திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி வந்திருக்கிறார். அது பற்றிய பேச்சு அடிக்கடி எழுந்திருக்கிறது. நிர்மலாவின் சம்மதத்தைப் பெற நடேசன் தீவிரமாக முயற்சி செய்து வந்ததாகவும், நிர்மலா தரப்பில் பிரச்னை ஏதும் வந்துவிடக்கூடாது என்று நடேசன் கவனமாகவும் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. தனது கணவன் இன்னொரு திருமணம் செய்துக் கொள்வதில் தீவிரமாக இருப்பதை அறிந்து நிர்மலா மனம் உடைந்துப் போனார். கடந்த சில நாட்களாக பித்துப் பிடித்தவராக நிர்மலா காணப்பட்டிருக்கிறார். உறவினர்கள் வீட்டுக்கு வந்து சமாதானம் பேசியும் சென்றிருக்கிறார்கள். இந்தநிலையில், இன்று காலை விட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு நிர்மலா இறந்திருக்கிறார். நிர்மலா இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் ஆலங்குடி போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.