ஸ்மார்ட் க்ளாஸ்... செயற்கை ஏரி... புது முயற்சிகளில் இறங்கும் சிஐஐ! #CII

``சிஐஐ அமைப்பானது, இந்தியாவிலேயே பெரிய தொழிற்கூட்டமைப்பு. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்தக் கூட்டமைப்பு செயல்பட்டுவருகிறது. இதில், தமிழகத்தில் மட்டுமே 1,600-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 80 சதவிகித உறுப்பினர்கள் எம்.எஸ்.எம்.இ பிரிவைச் சேர்ந்தவர்கள். சிஐஐ-யானது, மூன்றுவிதமான செயல்பாடுகளைச் செய்துவருகிறது.

1. கொள்கைசிஐஐ உருவாக்கம்.

2. கார்ப்பரேட் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு.

3. எம்.எஸ்.எம்.இ பிரிவை பல்வேறு பகுதிகளில் உருவாக்கி பலப்படுத்துவது.

சிஐஐ அமைப்பின் தலைவர் பி.ரவிச்சந்திரன், தனது தலைமைப் பொறுப்பு நிறைவடைவதையொட்டி, கடந்த ஓராண்டில் அவர் தலைமையின்கீழ் சிஐஐ அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார்.  

``கடந்த ஓராண்டில், விமானநிலைய வசதிகளை மேம்படுத்துவது என்பதை இலக்காகக்கொண்டு செயல்பட்டோம். விமானநிலைய உருவாக்கத்துக்காகவும், மேம்பாட்டுக்காகவும் மத்திய அரசு பெருமளவு செலவழிக்கக் காத்திருந்தாலும், நிலம் கையகப்படுத்துவதில்தான் தடங்கல் வருகிறது. கடந்த ஆறு மாத காலமாக தமிழக முதலமைச்சரும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்துச் செயல்படுகிறார். இதை இன்னும் நாம் துரிதப்படுத்த வேண்டும். ஏனெனில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழகத்துக்கு வரும்போது, விமானநிலையம் மிகச்சிறப்பாக இருந்தால்தான் அவர்களுக்கு இங்கே முதலீடு செய்யும் எண்ணம் வரும். இது தொடர்பாக மத்திய அமைச்சர்களையும் சந்தித்து கவனப்படுத்தியிருக்கிறோம்.

தமிழகக் கல்வித் துறையில் எங்களது சிஐஐ அமைப்பு, பெரும்பங்களிப்பு செய்துள்ளது. அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் க்ளாஸ் கொண்டுவர திட்டம் தீட்டியுள்ளோம். தமிழகத்தில் மொத்தம் 46,000 அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் சில பள்ளிகளில் ஒரே ஒரு மாணவன் மட்டுமே இருப்பதும் உண்டு. பத்து மாணவர்கள் மட்டுமே இருப்பதும் உண்டு. முதல்கட்டமாக நாங்கள் 7,000 பள்ளிகளை தமிழக அரசின் ஒத்துழைப்போடு தேர்வுசெய்துள்ளோம். இந்தப் பள்ளிகளை, சிஐஐ அமைப்பு உறுப்பினர்களின் நிறுவனங்கள் தத்தெடுக்கவுள்ளன. அப்படி தத்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் க்ளாஸ் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளோம். இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று முதல் மூன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனக் கணக்கிட்டுள்ளோம்.

நாங்கள் பள்ளியின் உள்கடமைப்பை மட்டும் மேம்படுத்துவதோடு நின்றுவிடாமல், எங்களது சிஐஐ அமைப்பின் உறுப்பினர்களின் நிறுவனத்திலிருந்து  ஒருவர் அந்தப் பள்ளிக்குச் சென்று, அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் அல்லது மாணவர்களுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பெடுக்கவும் தீர்மானித்துள்ளோம். ஏற்கெனவே எங்களது உறுப்பினர்களின் நிறுவனங்கள், கல்விப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். காக்னிஸன்ட், டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே கல்விப் பணியில் ஈடுபட்டுவருகின்றன. 

சிஐஐ

நீர் மேலாண்மையிலும் கவனம் செலுத்தும்படி தமிழக அரசை கேட்டுக்கொண்டிருக்கிறோம். நீர் மேலாண்மையில் மழைநீரைச் சேமிப்பது, சேமித்த நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது என்ற இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. நீர் சேமிப்பு முறைகளில் நாம் இன்னமும் பழங்கால முறைகளையே பின்பற்றிவருகிறோம். ஏரி, குளம், அணைக்கட்டுகளில் நீரைச் சேமித்துப் பயன்படுத்துவது என்பதே பழங்கால முறை. அந்த முறையால் பெருமழைக்காலங்களில்  நீர் வீணாகக் கடலில் கலப்பது வழக்கமாகிறது. சென்னையில் வர்தா புயல் போன்ற காலகட்டத்தில் பெய்த மழையானது மொத்தமாக கடலில் சென்றே கலந்தது. அந்த மழைநீரை சென்னைக்குள்ளேயே பத்து இடங்களில் சேமித்து வைத்து பயன்படுத்தியிருக்க நம்மால் முடியும். அதற்குப் பயன்படுவதுதான் செயற்கை ஏரி தொழில்நுட்பம். 

இந்தச் செயற்கை ஏரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதுகுறித்து பயிற்சியளிக்க ஜெர்மனியிலிருந்து வல்லுநர்களை அழைத்திருந்தோம். மழை வரும்போது, அந்த நீரைச் சேமிப்பதற்கு செயற்கை ஏரிகளை உருவாக்குவது குறித்து எங்களது முதலீட்டாளர்களுக்கு அவர்கள் பயிற்சியளித்தார்கள். அதாவது, பயன்பாட்டில் இல்லாத நிலங்களை செயற்கை ஏரியாக உருவாக்கி, அதன்மூலம் நீரைச் சேமிக்கும் உத்தியை அவர்கள் பயிற்றுவித்தர்கள். வர்தா புயல் போன்ற காலகட்டங்களில் பெய்த மழைநீர் வீணே கடலில் கலந்துவிடாமல், அவற்றை செயற்கை ஏரியில் தேக்கிவைத்துப் பயன்படுத்த இயலும். சென்னை நகருக்குள்ளேயே பத்து இடங்களில் செயற்கை ஏரியை உருவாக்க முடியும்.  அந்தத் தொழில்நுட்பம் குறித்த விழிப்புஉணர்வை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அடுத்தடுத்த கட்டத்தில் அதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவோம்.

சிஐஐ

அதேபோல தமிழ்நாட்டுக்கு கோழிப்பண்ணைக் கொள்கை ஒன்று தேவை. நாமக்கல் பகுதியில் கோழிப்பண்ணைகளை வளர்ச்சியடையச் செய்ய சில நிறுவனங்கள் மட்டுமே முன்னெடுப்பு செய்துவருகின்றன. இதை இன்னும் விரிவுப்படுத்தினால் தமிழகத்துக்கு 5 பில்லியன் டாலர் வரை வருமானம் எதிர்பாக்கலாம். இதற்காக ஒரு கொள்கையை வகுக்க தமிழக அரசை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். 

அதேபோல, இதே நாமக்கல் பகுதியில் டிரான்ஸ்போர்ட் வணிகம் முதன்மையாக இருக்கிறது. ஆனால், நம்மிடம் தேசிய அளவிலான போக்குவரத்து நிறுவனக் கொள்கை எதுவும் கிடையாது. எனவே, இதை உருவாக்குவதிலும் நாங்கள் கவனம் செலுத்திவருகிறோம். ஆனால், எந்தவொரு கொள்கையையும் ஒரே ஆண்டுக்குள் உருவாக்கி, அரசாங்கத்தின் ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்த முடியாது. எனவே, இவை அனைத்தும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தலைமையின் கீழும் செயல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வரும்.

அடுத்ததாக, குப்பைகளை மறுசுழற்சி செய்வதையும் பெரிய அளவில் செயல்படுத்தவுள்ளோம். என்னைப் பொறுத்தவரை குப்பைக்கழிவுகளும் வருமானமே. அடுத்த ஐம்பது ஆண்டுகளில், குப்பைகளை மறுசுழற்சி செய்வதன் மூலமாகவே பில்லியனர் ஆனவர்களை நாம் காணக்கூடும். அந்த அளவுக்கு குப்பைக்கழிவுகளில் வணிக வாய்ப்பு உள்ளது. இதற்கேற்ற தொழில்நுட்ப மேம்பாடுகள் இனி வரக்கூடும்.

எனது தலைமையில் நடந்த இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், சிங்கிள் விண்டோ க்ளியரன்ஸ் சிஸ்டமாகும். இதற்காக வணிக உத்வேகச் சட்டம் (business facilitation act) கடந்த நவம்பரில் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு, பிசினஸ் தொடங்குவதற்கான அனுமதி பெறும் நடைமுறை விரைவுப்படுத்தப்பட்டது. எங்களது சிஐஐ கூட்டமைப்பைச் சேர்ந்த நான்கு நிறுவனங்களுக்கே 21 நாள்களுக்குள் அனுமதி கிடைத்தது. இதில் எங்களது இன்னொரு வேண்டுதலாக, இந்தச் சட்டமானது புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு மட்டுமின்றி, ஏற்கெனவே தொழில் நடத்தி வருபவர்களுக்கும் அவர்களது தொழில் விரிவாக்கம் தொடர்பான அனுமதிகளையும் விரைவாகப் பெற உதவும்படி சட்டத்தை மேம்படுத்த வேண்டும்."

Do you like the story?

Please Appreciate the Author by clapping!