வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (11/03/2018)

கடைசி தொடர்பு:00:00 (11/03/2018)

`பெண்கள் பாதுகாப்புக்குத் தனிப்படை அமைக்க வேண்டும்!’ - திருமாவளவன் கோரிக்கை

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்கென  தனிப்படை அமைக்க வேண்டும்  என வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

 திருமாவளவன்

 

தருமபுரியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வருகை தந்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  பேசினார். அவர் கூறுகையில், ``காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி உடனடியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வரியம் அமைக்கவேண்டும், ஆனால் மத்திய அரசு வேண்டும் என்றே காலம் தாழ்த்தி வருகிறது. இதுதொடர்பாக நேற்று புதுடெல்லியில் 4 மாநிலத் தலைமை செயலாளர்கள், அரசு அதிகாரிகளிடம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய செயல் திட்டத்தை வரையறுக்க வேண்டும் என்றும் அதற்கு நான்கு மாநிலங்களின் அறிக்கை வேண்டும் என்ற கூறியுள்ளார். இதிலிருந்து மத்திய அரசின் உள்நோக்கம் அறிய முடிகின்றது. உடனடியாக தமிழக முதல்வர், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்றுக தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. 

திருச்சியில் சாலை பாதுகாப்பு ஆய்வாளரின் காட்டுமிராண்டி செயலால் 2 உயிர்கள் பலியாகி உள்ளன. தமிழக அரசு அவர் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை, மாற்றி கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, தமிழக அரசு ரூ.1 கோடி நிதி வழங்க வேண்டும். 

தமிழக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை பா.ஜ.கவை சேர்ந்த பொறுப்பாளர் கன்னத்தில் அறைந்ததும், செருப்பால் அடிக்க முற்பட்டதும் பா.ஜ.க-வின் தகுதியின்மையை வெளிப்படுத்தியுள்ளது. பா.ஜ.க. எவ்வளவு அநாகரிகமான முறையைக் கையாளுகிறது என்பதற்கு ஹெச்.ராஜாவும், அந்தப் பெண்மணியும் சான்றுகளாக இருக்கின்றனர். எனவே, தமிழக பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்? என விடுதலைச் சிறுத்தைகள் கேள்வி எழுப்புகிறது. இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண்மணி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது. 

பெரியார் சிலைகளை அகற்றுவோம் எனத் தெரிவித்தது மட்டுமல்லாமல் பெரியாரை சாதி வெறியர் என்று கூறிய ஹெச்.ராஜா திராவிட கட்சித் தலைவர்கள் மற்றும் இலக்கியவாதிகளைத் தொடர்ந்து தவறாகப் பேசிவருகிறார். அவரைக் குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும். தருமபுரி மாவட்டத்தில் தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இது தருமபுரி மாவட்ட மக்களை வஞ்சிக்கும் செயல் எனவே தமிழக அரசு இந்த மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

சென்னையில் அஸ்வினி என்ற கல்லூரி மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்குத் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது. இனி வரும் காலத்தில் தமிழக அரசு பெண்களை பாதுகாக்கத் தனிப் படையை அமைத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டும். அந்தக் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது’’ என்றார்.