“கமல் கண்ணில் படாமல் தூக்கப்பட்ட பேனர்கள்!” - வில்லங்கம் செய்த வேலுமணி ஆட்கள்

கமல்

கோவை எர்ப்போர்ட்  சாலையில்  கமலை வரவேற்று  மக்கள் நீதி மய்யத்தினர்  வைத்திருந்த பேனர்களை கமல் வருவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்பே வேலுமணி ஆட்கள் காணாமல் ஆக்கிய சம்பவம் மக்கள் நீதி மய்யத்தினரை கோபத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

திருப்பூர் மற்றும் ஈரோடு மக்களை சந்திப்பதற்கான இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை இன்று ஆரம்பித்தார் கமல். திருப்பூர் செல்வதற்காக இன்று மதியம் கோவைக்கு விமானம் மூலம் வந்த கமலுக்கு கோவையில் பலத்த வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏர்போர்ட் சாலை நெடுகிலும் ‘ஆளவந்தானே... விஸ்வரூபமே... மக்களின் நீதியே..’ என்ற வாசகங்களோடு ப்ளெக்ஸ்கள் வைத்திருந்தார்கள். ஏர்போர்ட்டிலிருந்து கார் வெளியேறும் இடத்தில் பேண்ட் வாத்தியம் வைத்து  இசைத்துக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கானோர் ‘மக்கள் நீதி மய்யத்தின்’ கொடியை ஏந்தியபடி ஏர்போர்ட் வளாகத்தை ஆக்கிரமித்திருந்தார்கள். ஃப்ளைட் வரும் நேரம் நெருங்க... நெருங்க... பரபரப்பு எகிறிக்கொண்டே போனது. கமல் தொண்டர்கள் அத்துனைபேரும்  கமலை பார்க்கும் ஆவலில் ஏர்போர்ட் நுழைவாயில் அருகே வந்துவிட்டார்கள். அந்த இடைப்பட்ட நேரத்தில்... ஒரு  டாடா  ஏஸ் வாகனம் முழுக்க ப்ளெக்ஸ்களோடு ஏர்போர்ட் சாலையில் நுழைந்தார்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆட்கள்.  

மக்கள் நீதி மய்யத்தினர் வைத்திருந்தது அத்தனையும் சாலைக்கு இடையூறு இல்லாத சிறிய அளவிலான ப்ளெக்ஸ்கள். ஆனால், வேலுமணி ஆட்கள் கொண்டு வந்திருந்த ப்ளெக்ஸ்களோ சாலையில் நீட்டிக்கொண்டிருக்கும் வகையிலான பெரிய சைஸ் ப்ளெக்ஸ்கள். கமல் வரும் ஃப்ளைட் தரையிறங்குவதற்கு பதினைந்து நிமிடங்களே இருந்தது. அதற்குள்ளாக மக்கள் நீதி மய்யத்தினர் வைத்திருந்த ப்ளெக்ஸ்களை கழற்றி கீழே போட்டுவிட்டு ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், வேலுமணி  ஆகியோர் படங்கள் தாங்கிய ப்ளெக்ஸ்களை வைத்துவிட்டு பறந்துவிட்டார்கள் வேலுமணி ஆட்கள். இது மக்கள் நீதி மய்யத்தினருக்கு தெரியாது. ஏர்போர்ட்டிலிருந்து கமல் கார் வெளியேறும்போது மக்கள் நீதி மய்யத்தினர் அதிர்ச்சி ஆகிவிட்டார்கள்! கமல் கண்ணில் படும்படி வரிசையாக அவர்கள் வைத்திருந்த  ப்ளெக்ஸ்களில் ஒரு ப்ளெக்ஸ்கூட இல்லை. அந்த இடங்களில்   திடீரென்று அ.தி.மு.க ப்ளெக்ஸ் முளைத்திருந்தது. வேலுமணி ஆட்களின் இந்த செயலைக் கண்டு மக்கள் நீதி மய்யத்தினர் இதைப்பார்த்து ஏகத்துக்கும் கொதித்துப்போயிருக்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!