வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (11/03/2018)

கடைசி தொடர்பு:05:00 (11/03/2018)

'தனியார் நிறுவனத்தால் மாசுபடும் நிலத்தடி நீர்' - போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்!

ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால் கிராமத்தில் நீர்ஆதாரங்கள் விஷமாக மாறியிருப்பதுடன் பலரும் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி அந்நிறுவனத்தை மூட வலியுறுத்தி கிராம மக்கள் குடியேறும் போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் கிருஷ்ணாபுரம் பகுதியில் கடற்கரைக்கு செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரால் கிராமத்தில் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு விஷமாகி வருவதாகவும், இதனால் பலருக்கு சிறுநீரகக் கோளாறுகள் ஏற்பட்டிருப்பதாகவும் கூறி அந்நிறுவனத்தை மூட வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில்  நிலத்தடி நீர் மாசுபடுத்தப்படுவது உண்மை என கோட்டாட்சியர்  தரப்பில் கூறப்பட்டது எனவும், ஆனால் சுற்றுச்சூழல் செயற்பொறியாளரோ நிலத்தடி நீர் சுவையாக இருப்பதாக சான்றளித்துள்ளதாகவும் குற்றம் சாட்டிய கிராம மக்கள் இன்று அந்நிறுவனத்தினுள் குடியேறும் போராட்டம் நடத்த முயன்றனர்.  

தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சி.ஐ.டி.யூ) மற்றும் பனைக்குளம் கிராம மக்களும் இணைந்து நடத்திய இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் எம்.கருணாமூர்த்தி, சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி ஆகியோர் தலைமை வகித்தனர். பனைக்குளம் ஜமாஅத் தலைவர்கள் அபுல்ஜமீன்,சமீர் ரகுமான்  முன்னிலை வகித்தனர். மீன்பிடி தொழிற் சங்க கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் கே.முனியாண்டி, துணைச் செயலாளர் எஸ்.கே.கணேசன் உட்பட ஏராளமான பொதுமக்கள் கையில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் குடியேரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் இருக்கும் இடத்தை நோக்கி புறப்பட்ட மக்களை காவல்துறையினர் வழிமறித்து நிறுவனம் இருக்கும் இடத்துக்கு செல்லக்கூடாது எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து கடற்கரைச் சாலையிலேயே அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி. எஸ்.வெள்ளத்துரை தலைமையிலான போலீஸாரும், வட்டாட்சியர் சண்முகசுந்தரம் தலைமையிலான வருவாய்த்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.